Trichy | திருச்சியில் இயந்திர கோளாறு காரணமாக சில இடங்களில் தாமதமான வாக்குபதிவு...

Trichy | திருச்சியில் இயந்திர கோளாறு காரணமாக சில இடங்களில் தாமதமான வாக்குபதிவு...

இயந்திர கோளாறு காரணமாக சில இடங்களில் தாமதமான வாக்குபதிவு..

திருச்சி மாவட்டத்தில் இயந்திர கோளாறு உள்ளிட்ட காரணங்களால்,  ஓரிரு இடங்களில் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. சில இடங்களில்,  தாமதமாக முகவர்கள் வரததால் மாதிரி வாக்குப்பதிவு தாமதமாக நடைபெற்றது.

  • Share this:
திருச்சி மாவட்டத்தில், திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, மணப்பாறை, திருவெறும்பூர், ஸ்ரீரங்கம், லால்குடி, மண்ணச்சநல்லூர் முசிறி, துறையூர் (தனி) என மொத்தம் 9 சட்டப் பேரவைத் தொகுதிகளில் வாக்குப் பதிவு இன்று காலை தொடங்கியது. மாவட்டத்தில் மொத்தம் 159 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மாவட்டம் முழுவதும்  11,35,780 ஆண் வாக்காளர்கள், 12,2,728 பெண் வாக்காளர்கள், 237 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம், 23,38,745 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம்  1,147 மையங்களில், 3,292 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பதட்டமான வாக்குச்சாவடிகள், 156 உட்பட, 1,490 வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள்  பொருத்தப்பட்டுள்ளன.

வாக்குச்சாவடி மையங்களில், 5,678 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 3,950 கட்டுப்பாட்டு கருவிகள், 4, 247 'விவிபேட்' எனப்படும், யாருக்கு வாக்களித்தோம் என்பதற்கான ஒப்புகை சீட்டு வழங்கும் இயந்திரம் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன. மொத்தம், 15,473 பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர். மொத்தம் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 188 நுண் பார்வையாளர்கள்,  215 மண்டல அளவிலான அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் வாக்குச்சாவடியில் காலை 5.30 மணிக்கே தேர்தல் அலுவலர்கள், ஊழியர்கள் காத்திருந்தினர். ஆனால் பல வாக்குச்சாவடிகளில் வேட்பாளர்களின் முகவர்கள் 6 மணிக்கு பிறகே வாக்குச் சாவடிக்கு வரத் தொடங்கினர். இதனால், மாதிரி வாக்குப்பதிவு தாமதமாகவே தொடங்கியது.

இந்நிலையில் திருச்சி மாவட்டம் லால்குடி அகிலாண்டேஸ்வரி நகர், அரசு மேல்நிலைப்பள்ளி (167A) பெண்கள் வாக்குசாவடியில் இயந்திரக் கோளாறு காரணமாக வாக்குப்பதிவு  தாமதமாக தொடங்கியது.  அத்துடன் முசிறி தொகுதிக்கு உட்பட்ட தா.பேட்டை ஒன்றியம் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் இயங்கும் வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்ததை சரி பார்க்கும் இயந்திரம் பழுது காரணமாக வாக்குப்பதிவு 45 நிமிடம் தாமதமாக தொடங்கியது.

திருச்சி கிழக்கு தொகுதி வாணப்பட்டறைத் தெரு, திருவெறும்பூர் பாப்பாக்குறிச்சியில் வாக்கு மாறி வேறு சின்னத்திற்கு விழுவதாக வாக்களித்தவர்கள் தெரிவித்தனர். ஆனால், முகவர்கள் முன்னிலையில் சரிபார்த்த பின்னர், எந்த பிரச்சினையும் இல்லை என்று உறுதி செய்தனர்.

அத்துடன் திமுக முதன்மைச் செயலாளரும், மேற்குத் தொகுதி வேட்பாளருமான கே.என். நேரு, தில்லைநகர் மக்கள் மன்றத்தில் வாக்களித்தார். பின்னர்கே.என்.நேரு செய்தியாளர்களிடம் கூறுகையில், ஆட்சி மாற்றம் உறுதி. மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்பார். அனைத்து இடங்களிலும் திமுகவிற்கு மக்கள் ஆதரவு அளிக்கின்றனர் என்றார்.

திருவெறும்பூர்  வேட்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி


திருச்சி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் திருவெறும்பூர்  வேட்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி  காலை 8 மணி அளவில் திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் பள்ளியில் வாக்களித்தார்.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அகில இந்திய தலைவர் காதர் மைதீன்


 

திருச்சி கிழக்கு வேட்பாளர் , அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பாலக்கரை அரசு பள்ளியில் வாக்களித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமையும். முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும் என்றார்.
இதே போல், திமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் திருச்சி சிவா எம்பி, வெஸ்ட்ரி பள்ளியில் வாக்களித்தார். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அகில இந்திய தலைவர் காதர் மைதீன். காஜாமியான் பள்ளியில் வாக்களித்தார்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: