உலகளாவிய டெண்டர் மூலம் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய முடிவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

முதல்வர் மு.க.ஸ்டாலின்

மாநில அரசுகளே தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்து பயன்படுத்த வேண்டும் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இதன்படி தமிழகத்திற்கு சுமார் 13 லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

 • Share this:
  உலகளாவிய ஒப்பந்த புள்ளிகள் மூலம் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

  தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா இரண்டாம் அலை தொற்றை கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,

  கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டிய அவசியத்தை முதலமைச்சர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அனைத்து மாநிலங்களிலும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஒன்றிய அரசு தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. 18 வயதில் இருந்து 45 வயது வரை உள்ளவர்களுக்கு, மாநில அரசுகளே தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்து பயன்படுத்த வேண்டும் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

  இதன்படி தமிழகத்திற்கு சுமார் 13 லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இது போதிய அளவில் இல்லாததால், உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகள் மூலம் தடுப்பூசிகளை இறக்குமதி செய்து பயன்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு, குறுகிய காலத்துக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகளை அரசு முனைப்புடன் எடுக்கும்.

  தமிழகத்தின் ஆக்சிஜன் பயன்பாட்டை ஒப்பிடும்போது, நமது மாநிலத்திற்கான மத்திய அரசின் ஒதுக்கீடு குறைவாகவே இருக்கிறது. இதை உயர்த்தி வழங்க முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்று தமிழகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீடு 280 டன்னில் இருந்து 419 டன்னாக உயர்த்தப்பட்டுள்ளபோதும் இன்னும் கூடுதல் ஆக்சிஜன் தேவைப்படுகிறது.

  அதனால் கூடுதல் ஆக்சிஜன் உற்பத்தி அலகுகளை உடனடியாக அமைத்திடவும், தொழிற்சாலைகளில் இருந்து ரயில்கள் மூலம் ஆக்சிஜனை கொண்டு வருவதற்கும் அதை சீராக மருத்துவமனைகளுக்கு விநியோகம் செய்வதற்கும் அனைத்து நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Esakki Raja
  First published: