சேலம் அஸ்தம்பட்டி அருகில் உள்ள சிஎஸ்ஐ பாலிடெக்னிக்கில் இன்று காலை 9 மணி அளவில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று முகாமை தொடங்கி வைத்தார். இங்கு திரளான பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி போட்டு சென்றனர்.
பிறகு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறும்போது, தமிழகத்தில் இன்று ஒரு லட்சம் இடங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசி போடாதவர்கள் பட்டியல் எடுத்து அவர்கள் அழைத்து வரப்பட்டு தடுப்பூசி போடப்படுகிறது. இதில் சுகாதாரத் துறை அலுவலர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். தமிழகத்தில் எல்லா இடங்களிலும் தடுப்பூசி முகாம் சிறப்பாக நடந்து வருகிறது என்றார்.
ஏற்காட்டில் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்ய வசதி செய்து தர பொதுமக்கள் கேட்டுக்கொண்டு உள்ளனர். ரூபாய் 1 கோடியே 5 லட்சம் மதிப்பில் ஏற்காட்டில் பிரேத பரிசோதனை கூடம் கட்டப்பட உள்ளது. இதற்கான இடத்தை ஏற்காட்டில் பார்வையிட்டேன். இந்த பணி ஒரு மாத காலத்தில் தொடங்கப்பட்டு விடும் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் விபத்தில் சிக்கியவர்கள் 56 ஆயிரம் பேர் காப்பாற்றப்பட்டு உள்ளனர். இன்னுயிர் காப்போம் திட்டத்தில் பலரும் பயன் அடைந்து உள்ளனர். சேலம் மாவட்டத்தில் 38 மருத்துவமனைகள் வர உள்ளது. யாருக்கு அதிகம் மருத்துவ வசதி தேவைப்படுகிறதோ அங்கு மருத்துவமனை வர உள்ளது என்று தெரிவித்தார்.
ஷவர்மா சாப்பிட்டு கேரளாவில் ஒருவர் இறந்து உள்ளார். இது மேலை நாட்டு உணவு. அங்கு கெடாது. இங்கு உள்ள தட்பவெட்பத்திற்கு உடனே கெட்டு விடும் என்ற அமைச்சர், இளைஞர்கள் அதிகம் இதை சாப்பிடுகிறார்கள். இதனால் நிறைய கடைகள் வருகிறது. இந்த உணவை பதப்படுத்த முடியுமா? என தெரியாமல் விற்கிறார்கள்.
இதனால் தமிழகம் முழுவதும் 1000க்கும் மேற்பட்ட கடைகளில் உணவு பாதுகாப்பு துறை மூலம் ஆய்வு செய்து அபராதம் விதித்து உள்ளோம். மக்கள் நம் உணவுகளை சாப்பிட வேண்டும். ஷவர்மாவை தடை செய்வது குறித்து ஆய்வு செய்தும் வருகிறோம் என்று அவர் கூறினார்.
மேலும் மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் மருந்து சாப்பிடக் கூடாது. மருத்துவமனைகளுக்கு வந்து மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று மருந்து சாப்பிட வேண்டும் என்ற அவர், வெளிமாநிலங்களில் இருந்து வந்த மாணவர்களால் கொரோனா தொற்று ஏற்பட்டது. இப்போது தொற்று இல்லை. 24 மணி நேரத்தில் 100 பேருக்கு மட்டுமே தொற்று வந்து உள்ளது என்றும் தெரிவித்தார்.
ALSO READ | பேருந்தில் சென்ற முதல்வர் டிக்கெட் எடுத்தாரா? பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி…
இதனிடையே கேரளாவில் தக்காளி வைரஸ் வந்து உள்ளதாக தெரிய வருகிறதே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அமைச்சர் சுப்பிரமணியன், இதுபற்றி சுகாதார துறை செயலாளர் கேரள அதிகாரிகளிடம் பேசி அந்த வைரஸ் பற்றி கேட்டறிந்து உள்ளார். அவரே சொல்வார் என்றார்.
அப்போது பேசிய சுகாதார துறை செயலாளர், கேரளாவில் தக்காளி வைரஸ் என்று சொல்லப்படுவது புதிய வைரஸ் அல்ல. சிக்கன்குனியா போன்று நல்ல நீரில் உருவாகும் கொசுவால் ஏற்படும் கிருமிகள். கண்ணத்தில் சிகப்பாக தழும்பு வருவதால் தக்காளி வைரஸ் என்ற பெட் நேம் வைத்துள்ளனர். இது குறித்து தமிழகத்தில் அனைத்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பயப்பட தேவை இல்லை. தக்காளிக்கும் இந்த வைரஸ்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என விளக்கமளித்தார்.
இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் பார்த்திபன்,சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ், சேலம் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் மற்றும் மருத்துவர்கள் என திரளானோர் பங்கேற்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ma subramanian