• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கூச்சல் - குழப்பத்துடன் நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

கூச்சல் - குழப்பத்துடன் நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

ஓபிஎஸ்-இபிஎஸ்

ஓபிஎஸ்-இபிஎஸ்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து விவாதிப்பதற்காக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

  • Share this:
    சென்னையில் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அன்வர் ராஜா-சி.வி.சண்முகம் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கூச்சல், குழப்பத்துடன் கூட்டம் முடிந்தது. இந்நிலையில், அதிமுக செயற்குழு கூட்டம் டிசம்பர் 1ஆம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிவித்துள்ளனர்.

    தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகளுக்கான, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து விவாதிப்பதற்காக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் நேற்று நடைபெற்றது.

    கூட்டத்துக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் செங்கோட்டையன், டி.ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ, சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் உள்பட அதிமுக முன்னாள் அமைச்சர்களும், வழிகாட்டுதல் குழு உறுப்பினர்களும் பங்கேற்றனர். இந்த கூட்டம் காலை 10.45 மணிக்கு தொடங்கியது.

    கூட்டம் தொடங்கியவுடன் அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா முதலில் பேசுவதற்கு எழுந்தார். அவர் சமீபத்தில், எடப்பாடி பழனிசாமியை ஒருமையில் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. எனவே அவருக்கு பேசுவதற்கு வாய்ப்பு வழங்க கூடாது என்று கூறி பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் அன்வர் ராஜா மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

    அப்போது, அன்வர் ராஜாவை கண்டித்து சி.வி.சண்முகம் ஆவேசமாகேப் பேசினார். இதனால் அவருக்கும், சி.வி.சண்முகத்துக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மோதல் உருவாகும் சூழலும் எழுந்த நிலையில், அன்வர் ராஜாவை பேசாமல் அமருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார். பின்னர் பேசிய அன்வர் ராஜா, தான் அவ்வாறு பேசியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து கூச்சல்-குழப்பம் குறைந்தது.

    இந்நிலையில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், அதிமுக வழிகாட்டுதல் குழுவுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும் என்றும், இந்த குழுவில் மூத்த உறுப்பினர்களை நியமிக்க வேண்டும் எனவும் விருப்பம் தெரிவித்தார். வழிகாட்டுதல் குழு உறுப்பினர் மனோஜ் பாண்டியன் பேசுகையில், அதிமுக தொழிற்சங்கம், கட்சியின் சொத்து கணக்கு வழக்கு விவரங்களை சரி பார்க்க வேண்டும். இதில் விடுபட்டுள்ள கட்சி சொத்துகளை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    என்.ஆர்.சிவபதி, கட்சி தலைமை பொறுப்புகளில் விடுபட்ட சாதியினருக்கும் இடம் கொடுக்க வேண்டும் என்று கோரிககை வைத்தார். அதற்கு பதிலளித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, கட்சியின் தலைமை கழக பொறுப்புகளில் அனைத்து சாதியினருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று பதிலளித்தார்.

    மேலும், நகர்ப்புற தேர்தல் என்பது சாதாரண தேர்தல் அல்ல என்றும், இந்த தேர்தலில் வெற்றி பெற மக்களின் நம்பிக்கையை பெற்றிருக்க வேண்டும் எனவும் கூறினார். தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி தற்போது மழை, வெள்ள பாதிப்பு, தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாதது போன்றவைகள் மக்கள் மத்தியில் திமுகவுக்கு சரிவாக இருக்கிறது. ஆகவே இதனை நாம் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு தேர்தல் பணியாற்றி வெற்றி வாகை சூட வேண்டும் என்றார்.

    பின்னர் பேசிய கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக ஆட்சியையும், கட்சியையும் காப்பாற்றுவதற்காகத்தான் நான் தர்ம யுத்தத்தை கைவிட்டேன். சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தபோது நாங்கள் எதிர்த்து வாக்களித்தோம். இல்லையென்றால் ஆட்சி பறிபோய் இருக்கும். கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்றியவன் நான்.

    எந்த காலத்திலும் ஒரு குடும்பத்தின் பிடியில் கட்சியும், ஆட்சியும் சென்று விடக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். எனவேதான் சசிகலாவை கட்சியில் சேர்க்க வேண்டும் என்ற கேள்வி எழுந்தபோது, கட்சி தலைமை கூடி முடிவு செய்யும் என்று கூறியிருந்தேன். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர்தான் நமக்கு தலைவர்கள். ஒருவர் கையில் அதிகாரம் இருக்க வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. எனவே வழிகாட்டுதல் குழுவை முறைப்படுத்தப்படுத்துங்கள். அதன்பின்னர் இந்த கமிட்டிக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் நான் கையெழுத்திடுகிறேன் என்று கூறினார்.

    3 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டம், உள்ளாட்சி தேர்தல் குறித்து விவாதிப்பதற்காக கூட்டப்பட்டிருந்த நிலையில், அதுகுறித்து பெரியளவில் விவாதிக்கப்படவில்லை. அதிமுக உள்கட்சி தேர்தலை முறையாக விரைவில் நடத்திட வேண்டும் என்பது குறித்தே பெரியளவில் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கூட்டம் முடிந்த பின்னர், சசிகலா விவகாரம் குறித்து அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதா? என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது ‘எம்ஜிஆர் மேல் சத்தியமாக இல்லை’ என்று பதிலளித்தார்.

    Must Read : மிழகத்திற்கு ஆரஞ்சு அலெர்ட்.... இந்த மாவட்டங்களில் இன்று மிக கனமழை

    இந்நிலையில், அதிமுக செயற்குழு கூட்டம் டிசம்பர் 1ஆம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக, வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் புதன்கிழமை காலை 10 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். செயற்குழு உறுப்பினர்களுக்கு தனித்தனியே அனுப்புதல் அனுப்பி வைக்கப்பட்டு என்றும் கூறியுள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: