மின் கட்டணம் செலுத்த ஜூன் 15 வரை கால அவகாசம் நீட்டிப்பு: தமிழக அரசு

மின்சாரம்(மாதிரிப் படம்)

ஏப்ரல் மாத மின் கட்டணம் செலுத்தாத உயர் மின் அழுத்த மின் இணைப்புகளுக்கு தாமத கட்டணத்துடன் ஜூன் 15ம் தேதி வரை செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  தாழ்வழுத்த மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை ஜூன் 15 ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

  தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மே.10ம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. எனினும் இந்த ஊரடங்கு காலத்தில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டதால், சாலைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கொரோனா தினசரி தொற்றும் 35 ஆயிரத்துக்குக் குறையாமல் தொடர்ந்து அதிகரித்தபடியே இருந்தது.

  அதனால் மே 24ம் தேதி முதல் மே 31ம் தேதி காலை 6 மணி வரை தளர்வுகளற்ற முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கடைகள், தனியார் அலுவலகங்களை மூட உத்தரவிட்ட அரசு, வங்கிகள், ஏடிஎம்-கள், பெட்ரோல் நிலையங்கள் செயல்படலாம் என அறிவித்தது. வங்கிகள் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களைக் கொண்டு செயல்படலாம் என உத்தரவிடப்பட்டது.

  இந்த முழு ஊரடங்கு சமயத்தில் தலைமைச்செயலகம், மருத்துவத்துறை, வருவாய்த்துறை, பேரிடர் மேலாண்மை, காவல்துறை, ஊர்க்காவல் படை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, சிறைத்துறை, மாவட்ட நிர்வாகம், மாவட்ட தொழில் மையங்கள், மின்சாரம், குடிநீர், உள்ளாட்சித் துறை, வனத்துறை அலுவலகங்கள், கருவூலங்கள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அலுவலகங்கள் தவிர மாநில அரசு அலுவலகங்கள் எதுவும் இயங்காது என தமிழக அரசு அறிவித்தது.

  இந்நிலையில், பொதுமக்களின் சிரமத்தை குறைக்கும் விதமாக மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை தமிழக அரசு நீட்டித்துள்ளது.

  இது குறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, சிறுகுறு தொழில்கள் மற்றும் தாழ்வழுத்த மின் நுகர்வோர் மின் கட்டணம் செலுத்த மே 31 வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஜூன் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாத மின் கட்டணம் செலுத்தாத உயர் மின் அழுத்த மின் இணைப்புகளுக்கு தாமத கட்டணத்துடன் ஜூன் 15ம் தேதி வரை செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

  மேலும் சிறு குறு தொழிற்சாலைகள் கூடுதல் வைப்புத்தொகை கேட்பு செலுத்தவும், தாழ்வழுத்த மின் நுகர்வோர் கூடுதல் வைப்புத்தொகை செலுத்தவும் ஜூன் 15வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Esakki Raja
  First published: