தமிழகத்தில் உள்ள இந்துக்கள் முஸ்லிம்கள் இடையேயான பாச உறவை என்றைக்கும் பிரிக்க முடியாது என கிணத்துக்கடவு தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் கூறினார்.
கோயம்புத்தூர் மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதி திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரனை ஆதரித்து, தயாநிதிமாறன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “வெறுப்பு அரசியல் செய்து இந்துக்களின் வாக்குகளைப் பெற்று தமிழ்நாட்டில் காலூன்ற பாஜக நினைக்கிறது. தமிழகத்தில் உள்ள இந்துக்கள், முஸ்லிம்கள் இடையேயான பாச உறவை என்றைக்கும் பிரிக்க முடியாது.
அதிமுக குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை ஆதரித்தது. ஆனால், தற்போது மீண்டும் ஆட்சிக்கு வந்தால் குடியுரிமை சட்டத்தை எதிர்ப்போம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். சட்டத்தை ஆதரித்து நாடாளுமன்றத்தில் வாக்களித்துவிட்டு தற்போது தேர்தலுக்காக பொய் சொல்கிறார்.
ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை பறிக்கும் நீட் தேர்வை மத்திய அரசு கொண்டு வந்தது. அதன் பின்னர், தமிழகத்தில் 14 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். நர்சிங் படிக்க வேண்டும் என்றாலும், கலை, அறிவியல் கல்லூரியில் சேரவும் தகுதித் தேர்வு அவசியம் என்கின்றனர். ஆகவே, தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க
திமுகவுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.” என்று கூறினார்.
Must Read : அரசியல் களத்தில் அதிமுக துண்டுடன் அமைச்சர் வேலுமணியின் மகன்
அத்துடன், “அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, ஜெயலலிதா எங்களுக்கு அம்மா, மோடி எங்கள் அப்பா என்கிறார். என்ன உறவுமுறை பாருங்கள். இதை நாம் சொன்னால் தவறு என்பார்கள்” என்றார் தயாநிதி மாறன்.