ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு 73 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்து, தொகுதி முழுவதும் கோடீஸ்வரர்கள் போல் பத்திரிகை வழங்கிய அமைச்சர் வேலுமணி செலவு கணக்கு காட்டத்தயாரா? என்றும், ஊழல் பணத்தில்தான் அவர் செலவு செய்கிறார் எனவும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் விமர்சித்துள்ளார்.
தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி பேரூரில் தனது பிரச்சாரத்தை துவங்கினார். அவருக்கு ஆதரவு கேட்டு திமுக எம்.பி தயாநிதி மாறன் பேரூரில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய தயாநிதி மாறன், “முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பொருப்பேற்றது முதல், தமிழகம் முன்னேறுகிறது என கூறி வருகிறார். ஊழலில் மட்டும் தான் முன்னேறுகிறது, முதலமைச்சருக்கு அடுத்தபடியாக அமைச்சர் வேலுமணி தான் அதிகளவு ஊழல் செய்தவர். கடந்த 10 ஆண்டுகளாக அமைச்சராக இருந்து அனைத்து டெண்டர்களிலும் ஊழல் செய்துள்ளார்.
ஸ்டாலின் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த போது குடிநீருக்கு கூட்டுக் குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தார். தொகுதி மக்களுக்கு பல்வேறு பணிகளை செய்வதாக கூறும் தற்போதய அமைச்சர் தொண்டாமுத்தூர் தொகுதியில் தரைவழி மின்சார திட்டத்தையோ, பாதாள சாக்கடை திட்டங்கள் கொண்டு வந்திருக்கலாம், மத்திய அரசு ஆயிரம் கோடிகளை வழங்குகிறது, ஆனால் அதை வைத்து என்ன செய்தீர்கள்” என கேள்வி எழுப்பினார்.
மேலும், ஜெயலலிதா பிறந்த நாளுக்கு 73 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்தார். அதற்கு கோடீஸ்வரர்கள் பத்திரிக்கை வைப்பது போல் தட்டு, சேலை, வேட்டிகளோடு தொகுதி முழுவதும் கொடுத்துள்ளார். சொந்த பணத்தில் வழங்கியதாக கூறிய அமைச்சர், வருமான வரி கணக்கு காட்டவில்லை. கருப்பு பணத்தில் தான் கொடுத்துள்ளார். மக்கள் கேள்வி கேட்பார்கள் என அவர் நினைக்கவில்லை.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியது போல, ஊழல் பணத்தில்தான் வந்தது.
மு.க.ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்தவே தற்போது திமுக வேட்பாளர் சிவசேனாபதி களத்திற்கு வந்துள்ளார். கொங்கு நாட்டு மக்கள் ஜெயலலிதா மீது பாசமாக இருப்பார்கள், ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளது என திமுக தலைவரோ, நிர்வாகிகளோ கூறவில்லை, துணை முதல்வராக உள்ள பன்னீர்செல்வம் கூறினார். அதன் பின் முதல்வர் அழைத்து துணை முதல்வர் பதவி கொடுத்தார். அப்போது இருவரும் இணைந்து கூட்டறிக்கை விட்டார்கள் 6 மாதத்தில் விசாரணை ஆணையம் அமைத்து உண்மையை கண்டறிவோம் என கூறி, 4 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது, ஜெயலலிதா மரத்திற்கு காரணம் யார் என்பதை திமுக ஆட்சிக்கு வந்ததும் கண்டுபிடிப்போம்.
மறைந்த தலைவர் கலைஞர், ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவ கல்லூரி கொண்டுவந்தார். ஆனால் மோடி சூத்திரர்கள் படிக்க கூடாது என கருதி நீட் தேர்வை கொண்டு வந்துள்ளார். உலகில் தலை சிறந்த மருத்துவர்கள் தமிழக மருத்துவர்கள்தான், ஆனால் சமமாக வரக்கூடாது என நீட் தேர்வை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் கிடையாது ரத்து செய்வோம், மதத்தின் பெயரால் பிளவு படுத்த முயற்சிகளை நடந்து வருகிறது.
புதிய கல்வி கொள்கை மூலம், எதை படித்தாலும் நுழைவு தேர்வு எழுத வேண்டும் என்ற நிலையை உருவாக்கி விட்டது மத்திய அரசு. இதற்கு முக்கிய காரணம், இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் படித்தவர்கள் அதிகளவு உள்ளவர்கள், அந்த பொறாமையில்தான் இதை செய்து வருகிறார்கள்.
Must Read : ஓபிஎஸ் வருகை ரத்து : காத்திருந்து ஏமாற்றத்துடன் வீடு திரும்பிய தொண்டர்கள்
கொரோனா நடவடிக்கையில் தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய மோடி இருவருமே கோமாளிகள் போல் செயல்படுகினற்னர்” இவ்வாறு கூறினார் தயாநிதி மாறன்.