சென்னை: காணாமல்போன 13 வயது மகளைக் கண்டுபிடித்துத் தராததால் விரக்தியில் தீக்குளித்த தந்தை

சென்னை: காணாமல்போன 13 வயது மகளைக் கண்டுபிடித்துத் தராததால் விரக்தியில் தீக்குளித்த தந்தை

கோப்புப்படம்.

காணாமல்போன மகளைக் கண்டுபிடித்துத் தராத விரக்தியில் தந்தை சேலையூர் காவல் நிலையம் எதிரே தீக்குளித்தது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
    சென்னை தாம்பரம் அடுத்த காமராஜபுரம் பவநந்தியார் தெருவைச் சேர்ந்தவர்கள் சீனிவாசன் - ரம்மியா தம்பதி. இவர்களுக்கு 10 வயதில் மகனும் 13 வயதில் மகளும் உள்ளனர். மகள் தனியார் பள்ளியில் 8ம் வகுப்புப் படித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 3.12.2020 காலையில் சீனிவாசன் எழுந்து வீட்டில் பார்த்தபோது மகளைக் காணாமல் போனது அறிந்து அதிர்ச்சியடைந்தார். பல இடங்களில் தேடியும் அந்தச் சிறுமி கிடைக்கவில்லை. சிலரிடம் விசாரிக்கையில், சிறுமி அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் யுவராஜ் (19) என்பவரிடம் பேசி இருந்ததாகக் கூறியுள்ளனர்.

    யுவராஜ் வீட்டுக்குச் சென்று விசாரித்தபோது, யுவராஜ் வீட்டில் இல்லாததால் அவர்தான் 13 வயது மகளை ஆசை வார்த்தைக் கூறி அழைத்துக்கொண்டு சென்றுள்ளார் என்று தெரியவந்தது. அதையடுத்து, சேலையூர் காவல் நிலையத்துக்குச் சென்று சீனிவாசன் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    மகள் காணாமல்போனது குறித்து உறவினர்கள் மற்றும் அப்பகுதியில் உள்ளவர்கள் சீனிவாசனிடம் கேட்டு வந்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் போலீசாரிடம் தனது மகளைக் கண்டுபிடிப்பதற்கு நடவடிக்கை குறித்து கேட்டுள்ளார்.
    அதற்கு சேலையூர் போலீசார் அலட்சியமான பதில் அளித்ததாக கூறப்படுகிறது. போலீசார் 3 நாட்கள் ஆகியும் மகளைக் கண்டுபிடித்து தராததால் மன உளைச்சலுக்கு ஆளான சீனிவாசன் ஆட்டோவில் வைத்திருந்த பெட்ரோலை எடுத்து அவர் மீது ஊற்றி தீ வைத்துக்கொண்டு காவல் நிலையம் நோக்கி அலறியபடி சென்றுள்ளார்.

    Also read: காஞ்சிபுரம்: கழிவறை இல்லாத அரசு அலுவலகம்... செப்டிக் டேங்கில் விழுந்த மாற்றுத்திறனாளி பெண் ஊழியர் உயிரிழப்பு..

    இதனைக் கண்ட காவல் நிலையத்தில் இருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்து  உடனடியாக தண்ணீர் ஊற்றி தீயினை அணைத்தனர். தீ காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில், குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீ காயம் 80 சதவிகிதம் இருப்பதால் அவர்கள் தீவிர சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதற்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பட்டப்பகலில் சேலையூர் காவல் நிலையம் அருகே நடைபெற்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    மேலும் புகார் அளித்து மூன்று நாட்களில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் போலீசார் மெத்தனமாக செயல்பட்டதே தற்கொலை முயற்சிக்கு காரணம் என்று உறவினர்கள் குற்றம் சாட்டிகின்றனர். காணாமல் போன சிறுமியைக் கண்டு பிடிப்பதற்காக சேலையூர் காவல் உதவி ஆணையர் சகாதேவன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வருகின்றனர்.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Rizwan
    First published: