ஏ.ஆர்.முருகதாஸ் - ரஜினிகாந்த் கூட்டணியில் நேற்று வெளியான படம் தர்பார். இந்தப் படத்தில் காசு இருந்தால் சிறைக்கைதி கூட ஷாப்பிங் போகலாம் என்ற வசனம் இடம்பெற்றுள்ளது.
இந்த வசனம் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையிலிருக்கும் சசிகலாவை மனதில் வைத்தே உருவாக்கப்பட்டிருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த தமிழக அமைச்சர் ஜெயக்குமார், “தர்பார் திரைப்படத்தில் சமுதாயத்திற்கு கேடு விளைவிக்கின்ற பணத்தினால் எதையும் சாதிக்க முடியும் என்று நினைக்கும் மனிதர்களைப் பற்றி எடுக்கப்பட்டுள்ளது.
அதாவது பணம் பாதாளம் வரைக்கும் பாயும் அதேசமயத்தில் பணம் சிறைச்சாலை வரைகூட பாயும் என்று சசிகலா அவர்களை சுட்டிக்காட்டி படம் எடுக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கு விசாரணையில் உள்ளதால் அதை பற்றி நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை, ஆனால் அதே சமயத்தில் திரைப்படங்கள் வாயிலாக நல்ல கருத்துக்களை தமிழக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்” என்றார்.
சர்ச்சைக்குரிய வசனத்தை தர்பார் படத்திலிருந்து நீக்க வேண்டும் என்று சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்திருந்தார். மேலும், காவல்துறை அதிகாரி வினய் குமார் அறிக்கையில் சசிகலா ஷாப்பிங் போனதாக எங்கேயும் குறிப்பிடவில்லை என்று தெரிவித்திருக்கும் அவர், அந்தக் காட்சிகளை நீக்க வேண்டும் என்றும், அவ்வாறு நீக்கப்படாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை பாயும் என்றும் தெரிவித்துள்ளோர். அதேபோல் ஆதாரம் இல்லாமல் பேசும் ஜெயக்குமார் மீதும் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வைப்போம் என்றும் வழன்க்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கூறியிருந்தார்.
இந்த நிலையில், இந்த சர்ச்சை தொடர்பாக லைகா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. எங்களின் தர்பார் திரைப்படத்தில் கைதிகள் சிறைச்சாலையை விட்டு வெளியே செல்வதை குறிக்கும் வார்த்தைகள் பொதுவாக எழுதப்பட்டதே தவிர, எந்த ஒரு தனிப்பட்ட நபரையும் குறிக்க எழுதப்பட்டது அல்ல. இருப்பினும், அந்த வார்த்தைகள் சிலரது மனதை புண்படுத்துவதாக தெரிய வந்தால், படத்தில் இருந்து நீக்கப்பட்டதாக தெரிவித்துக் கொள்கிறோம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.