Home /News /tamil-nadu /

நியூஸ் 18 செய்தி எதிரொலி: திருவண்ணாமலையில் 12 வருடங்களுக்குப் பின் சீரமைக்கப்படும் அணை

நியூஸ் 18 செய்தி எதிரொலி: திருவண்ணாமலையில் 12 வருடங்களுக்குப் பின் சீரமைக்கப்படும் அணை

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே 12 ஆண்டுகளாக பழுதாகி கிடந்த செண்பகதோப்பு அணையில் நியூஸ் 18 செய்தி எதிரொலியால் மீண்டும் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

போளூர் அடுத்த படவேடு கிராமத்தில் கமண்டல நாக நதியின் குறுக்கே திமுக ஆட்சியில் 34 கோடி ரூபாய் மதிப்பில் 6 ஆயிரத்து 693 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் வகையில் செண்பகதோப்பு அணை கட்டப்பட்டது. திறப்பு விழாவுக்கு முன், ஆற்றில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், அணையின் மதகுகள் வழியாக நீர் திறக்கப்பட்டன. இருப்பினும், அப்போது ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் அணையின் மதகுகள் பழுதடைந்தன.

இதனால், கடந்த 12 ஆண்டுகளாக இந்த அணை பயனளிக்காமல் இருந்தது தொடர்பாக நியூஸ் 18 தொலைக்காட்சியில் பலமுறை செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில், கலசப்பாக்கம் எம்எல்ஏ பன்னீர்செல்வம் மற்றும் கிராம மக்களின் தொடர் கோரிக்கையை அடுத்து அணையில் உள்ள பழுதடைந்த மதகுகளை அகற்றி புதிய மதகுகளை அமைக்க 16 கோடியே 37 லட்சம் ரூபாயை தமிழக அரசு கடந்த ஆண்டு ஒதுக்கியது. இதையடுத்து, அணையில் புதிய மதகுகளை பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

திருச்சியைச் சேர்ந்த சூப்பர் ஃபேப்ரிகேட்டர்ஸ் என்ற நிறுவனம், அணையில் உள்ள பழுதான மதகுகளை வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இது தொடர்பாக பலமுறை செய்தி வெளியிட்ட நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும், அணையின் சீரமைப்பு பணிகளை விரைவாக முடித்து முப்போக சாகுபடி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கூறிள்ளனர்.

Also see:
Published by:Rizwan
First published:

Tags: Thiruvannamalai, திருவண்ணாமலை

அடுத்த செய்தி