• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பெட்ரோல் போடுவதில் ஏற்பட்ட தகராறில் கூலித் தொழிலாளி எரித்துக் கொலை.. சிக்கியது சிசிடிவி காட்சி

பெட்ரோல் போடுவதில் ஏற்பட்ட தகராறில் கூலித் தொழிலாளி எரித்துக் கொலை.. சிக்கியது சிசிடிவி காட்சி

Youtube Video

தஞ்சை மாவட்டத்தில் கூலித் தொழிலாளி எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் பங்க்கில் ஏற்பட்ட வாய்த் தகராறில், 2 இளைஞர்கள் அவரை கொலை செய்து எரித்துள்ளது தெரியவந்துள்ளது. குற்றவாளிகள் சிக்கியது எப்படி? |

  • Share this:
    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாராசுரத்தைச் சேர்ந்தவர் 40 வயதான ஸ்ரீதர். இவர் ஒரு கூலித் தொழிலாளி. இவர் மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். ஞாயிற்றுக்கிழமை அன்று தாராசுரம் காய்கறி மார்க்கெட் ஈபி காலனியில் ஸ்ரீதர் பாதி எரிந்த நிலையில் சடலமாகக் கிடந்தார். சடலத்தை மீட்ட போது, தலையில் ரத்தக் காயம் இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் கும்பகோணம் போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.

    சம்பவ நாளன்று, ஸ்ரீதர் சென்ற பகுதிகளின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது தஞ்சை பிரதான சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கிற்கு அவர் தனது வாகனத்துடன் சென்றது தெரியவந்தது. பெட்ரோல் பங்க்கில் உள்ள சிசிடிவியை ஆய்வு செய்தபோதுதான் ஸ்ரீதரின் கொலைக்கான காரணம் அம்பலமானது.

    ஞாயிறன்று இரவு 11 மணி்யளவில் தனது வாகனத்துடன் பெட்ரோல் பங்கிற்கு சென்றுள்ளார் ஸ்ரீதர். அங்கு அவருக்கு முன்பாக இரு இளைஞர்கள் தங்கள் வாகனத்திற்கு பெட்ரோல் போட நின்றிருந்தனர். அவர்களை சீக்கிரம் பெட்ரோல் போட்டு இடத்தை விட்டு அகலும்படி ஸ்ரீதர் கூறியுள்ளார்.

    இதுதொடர்பாக இளைஞர்களுக்கும் ஸ்ரீதருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் வாய்த்தகராறு அடிதடியாகி இரு இளைஞர்களும் ஸ்ரீதரை சரமாரியாகத் தாக்கினர். அடி தாங்க முடியாத ஸ்ரீதர் அவரது வாகனத்தை அங்கேயே போட்டு விட்டு ஈபி காலனிக்கு ஓடியுள்ளார்.

    அவரைத் துரத்திச் சென்ற இளைஞர்கள், கல்லால் அடித்துள்ளனர். அதில் நிலைகுலைந்து குப்புற விழுந்தவரின் தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்துள்ளனர். பின்னர் கையில் வைத்திருந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றித் தீ வைத்து எரித்து விட்டு தப்பியோடி விட்டனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஸ்ரீதரைக் கொலை செய்த தாராசுரத்தைச் சேர்ந்த 23 வயதான சந்தோஷ் மற்றும் அஜித் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    மேலும் படிக்க...கேரளாவை உலுக்கிய தற்கொலை.. போலீசாருக்கு அதிர்ச்சி தந்த ஹேக்கர்ஸ் (வீடியோ)

    சந்தோஷ் கொத்தனார் வேலை செய்து வந்துள்ளார். அஜித் பித்தளைப் பட்டறையில் கூலி வேலை செய்து வந்துள்ளார். இருவரும் குடிபோதையில் ஸ்ரீதரைத் தாக்கி கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர். கைது செய்த இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் பின்னர் சிறையில் அடைத்தனர்.

     

    பெட்ரோல் பங்கில் நடந்த சாதாரண வாய்த் தகராறு கொலையில் முடிந்த சம்பவம் தாராசுரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: