முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஓலா ஊபர் போன்ற புதிய டாக்ஸி ஆப் கூட்டுறவு சங்கம் மூலம் அறிமுகம்

ஓலா ஊபர் போன்ற புதிய டாக்ஸி ஆப் கூட்டுறவு சங்கம் மூலம் அறிமுகம்

ஓலா ஊபர் போன்ற புதிய டாக்ஸி ஆப் கூட்டுறவு சங்கம் மூலம் அறிமுகம்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கார் ஓட்டுநர்கள் இணைந்து கூட்டுறவு சங்கமாக பதிவு செய்து தமிழக தொழில் மற்றும் வணிக துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 'டி டாக்ஸி' (D Taxi) என்ற புதிய கால் டாக்சி சேவையை தொடங்கியுள்ளனர். செல்போன் ஆப் மூலமாக செயல்படும் பிற கால் டாக்சி சேவைகளை போன்றே இதுவும் செயல்படுகிறது.

பீக் சார்ஜ் இல்லை

இதில் பதிவு செய்யும் ஓட்டுநர்கள் மாதம் 3000 ரூபாய் மட்டுமே செலுத்தவேண்டும். ஒவ்வொரு வாடிக்கையாளரையும் பிக்கப் செய்வதற்கான கமிஷன் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை. வாகன நெரிசல் அதிகமாக இருக்கும் நேரத்தில் பல மடங்கு கட்டணம் வசூலிக்காமல் கூடுதலாக பயணிக்கும் நிமிடங்களுக்கு குறிப்பிட்ட தொகை மட்டும் வசூலிக்கப்படுகிறது. ஒரு ட்ரிப் ரத்து செய்யப்பட்டால் அதற்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை.

டார்கெட் நிர்ணயம் இல்லை

மற்ற கால்டாக்சி சேவைகளில் ஒரு நாளைக்கு எத்தனை டிர்ப் எடுக்க வேண்டுமென்ற டார்கெட் நிர்ணயம் செய்யப்படுகிறது . ஆனால் இந்த சேவையில் அது போன்ற டார்கெட் எதுவும் இல்லாததால் மன உளைச்சல் இல்லாமல் பணி செய்ய முடிகிறது என்கிறார், நம்மிடம் பேசிய ஓட்டுநர்  பால் முத்துபாண்டி .

'வாடிக்கையாளர் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்'

கார்ப்பரேட் நிறுவன கால் டாக்ஸி சேவைகளால் பாதிக்கப்பட்ட ஓட்டுனர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற இந்த சேவை பயன்படும் என்றும் அதே நேரம் வாடிக்கையாளர்களுக்கு தரமான பாதுகாப்பான சேவையை வழங்கும் என்கிறார் டி டாக்ஸி தொழில் கூட்டுறவு சேவை சங்கம் லிமிடட் தலைவர் பாலாஜி.

" சொந்தமாக கார் வைத்திருப்பவர்கள் தான் இந்த சேவையில் அனுமதிக்கப்படுவர். எனவே அவர்கள் வாடிக்கையாளருடன் சரியான போக்கை மேற்கொள்வார்கள். இந்த சேவையில் ஓட்டுநர்களின் செயல்பாடு மட்டுமே கட்டுப்படுத்தப்படும். அவர்களது வருமானம் கட்டுப்படுத்தப்படுவதில்லை. 3 ஆயிரம் அல்லாமல் அவர்கள் என்ன சம்பாதிக்கிறார்களோ அது அவர்களுக்கே. முதலில் ஓட்டுநர்களை வாடிக்கையாளர்கள் தங்கள் குடும்பத்தின் ஒரு நபர் போல் பாவிப்பார்கள். வெளியூர் செல்வது, குடும்ப விழாக்களில் மரியாதையுடன் நடத்துவார்கள். ஓட்டுநர்களும் கவனத்துடன் இருப்பார்கள். ஆனால் தற்போது அந்த கலாச்சாரமே மாறிவிட்டது. ஒரு கர்ப்பிணி பெண்ணை நான் பிக்கப் செய்ய போகும் போது" நீங்கள் மெதுவாக ஓட்டுவீர்களா ? இதற்கு முன் வந்தவர்கள் வேகமாக ஓட்டியதில் நான் பயத்துடன் வயிற்றை பிடித்து கொண்டே உட்கார வேண்டியிருந்தது" என்று பயத்துடன் கேட்டார். டார்கெட் நிர்ணயம் செய்து விட்டால் கர்ப்பிணி என்று கூட பாராமல் வேகமாக ஓட்டினால் தான் அடுத்த வேளை அந்த ஓட்டுநர் சாப்பிட முடியும். டி டாக்சி சேவை நாங்களே தொடங்கியிருப்பதால் அது போன்ற மன உளைச்சல் ஏற்படுத்தும் சூழ்நிலைகள் எதுவும் கிடையாது" என்கிறார் பாலாஜி.

கூட்டுறவு சங்கமாக பதிவு செய்த ஒட்டுநர்கள்

இந்த சேவை எப்படி தொடங்கப்பட்டது என்பது குறித்தும் நம்மிடம் விவரித்தார் பாலாஜி.

"இரண்டு ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசு இது போன்ற சேவை தொடங்க முன்வருவது குறித்த மாதிரி அரசாணை வெளியிட்டது. அப்போது தான் இந்த ஐடியா தோன்றியது. 34 ஓட்டுநர்கள் இணைந்து கூட்டுறவு சங்கமாக பதிவு செய்தோம். கூட்டுறவு சங்கமாக பதிவு செய்துள்ளதால் தனியாரோ, அரசியல் கட்சிகளோ தலையிட முடியாது. தமிழக கூட்டுறவு தேர்தல் ஆணையம் மூலம் நடத்தப்படும் தேர்தலில் தான் நான் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன்" என்கிறார்.

தற்போது சென்னையில் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்த சேவை விரைவில் கோவையிலும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

First published:

Tags: D Taxi, Taxi