பாஜகவின் மதவெறி தமிழ்நாட்டில் எடுபடாது என்றும், சட்டமன்ற தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களிலும் அவர்களை மக்கள் நிராகரிப்பார்கள் எனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் டி.ராஜா கூறியுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் டி.ராஜா செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, “இந்திய அரசமைப்பு சட்டம், ஜனநாயகத்தைக் காக்க 5 மாநில தேர்தலில் மக்கள் அளிக்கும் தீர்ப்பு மதவெறி பாஜகவின் தோல்வியை உறுதிப்படுத்தும் வகையில் இருக்கும்.
அந்த வகையில் தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற கூட்டணியில் கம்யூனிஸ்டுகள் உள்ளனர். இந்த கூட்டணியே வெற்றி பெறும். பாஜகவின் மதவெறி தமிழ்நாட்டில் எடுபடாது. பாஜகவுடன் அணி சேரும் எந்த கட்சியும் மக்களால் நிராகரிக்கப்படும்” என்று கூறினார்.
முன்னதாக, கட்சியின் மாநில குழு மற்றும், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது, மறைந்த தா.பாண்டியன் உருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
Must Read: கன்னியாகுமரியில் மீண்டும் களமிறங்குகிறார் பொன்.ராதாகிருஷ்ணன்
கூட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் டி.ராஜா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.