Home /News /tamil-nadu /

புயல் கரையை கடந்த பிறகு நடக்கவிருக்கும் நிகழ்வுகள் - வானிலை மையம் குறிப்பிடுவது என்ன?

புயல் கரையை கடந்த பிறகு நடக்கவிருக்கும் நிகழ்வுகள் - வானிலை மையம் குறிப்பிடுவது என்ன?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

நிவர் புயல் கரையைக் கடந்தாலும் வட மாவட்டப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது.

    கடந்த 21-ந் தேதி வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று நிவர் புயலாக மாறியது. பின்னர் தென்மேற்கு வங்க கடலில் நிலைகொண்டிருந்த நிவர் புயல் மெதுவாக  மேற்கு நோக்கி நகர்ந்து வந்த நிலையில், தீவிர புயலாக மாறியிருப்பதாகக் கூறப்பட்டது. இதனிடையே புதுச்சேரிக்கு வடக்கே மரக்காணம் அருகே நவம்பர் 25 நள்ளிரவு 11.30 மணி அளவில் கரையை கடக்க தொடங்கிய நிவர் புயல், நவம்பர் 26 2.30 மணி வரை முழுவதும் கரையைக் கடந்தது. வானிலை ஆய்வு மைய தகவல்படி, தற்போது, புயலானது வலுவிழந்துக்கொண்டு வருகிறது. மேலும், தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் கனமழை இருக்கும் என்றும் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    தீவிர புயல் கரையை கடந்த பிறகு அடுத்த 6 மணி நேரத்தில் படிப்படியாக வலுவிழந்து புயலாகவும் அதற்கு அடுத்த 6 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும். இதன் காரணமாக உள் மாவட்டங்களில் திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி கன மழையும் ஒருசில இடங்களில் கன முதல் மிக கன மழையும் பெய்யக்கூடும். சூறாவளி காற்று மணிக்கு 65 இல் இருந்து 75 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 85 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் .

    26ஆம் தேதி பலத்த காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும் வேலூர் , ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் வீசக்கூடும். ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் கூரை வீடுகள் மற்றும் குடிசைகள், மேற்கூரைகள் பாதிப்புக்குள்ளாகும். மின் இணைப்புகள் மற்றும் தொலைத் தொடர்புகள் துண்டிக்கப்படலாம்.

    மண் சாலைகள், தார் சாலைகள், வெள்ள நீரால் பாதிக்கப்படும். மரங்கள் வேரோடு சாயும், மரக்கிளைகள் முறிந்து விழும், வாழை, பப்பாளி மரங்கள் மற்றும் பயிர் வகைகள் பாதிக்கப்படும்.
    பொதுமக்கள் வீட்டினுள் பாதுகாப்பாக இருக்குமாறும், அரசு மற்றும் பேரிடர் மேலாண்மை எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Cyclone Nivar

    அடுத்த செய்தி