Home /News /tamil-nadu /

Cyclone Nivar | சென்னையில் பெரிய பாதிப்புகள் இல்லை: தொடர் மழையால் சாலைகளில் நீர் தேக்கம்

Cyclone Nivar | சென்னையில் பெரிய பாதிப்புகள் இல்லை: தொடர் மழையால் சாலைகளில் நீர் தேக்கம்

மழை நீரில் மூழ்கியிருக்கும் சாலை

மழை நீரில் மூழ்கியிருக்கும் சாலை

நிவர் புயல் கரையைக் கடந்துள்ளநிலையில் சென்னையில் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏதும் இல்லை என தெரியவந்துள்ளது. சென்னையில் ஆங்காங்கே மரங்கள் சரிந்து விழுந்துள்ளன.

    கடந்த 21-ந் தேதி வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று நிவர் புயலாக மாறியது. பின்னர் தென்மேற்கு வங்க கடலில் நிலைகொண்டிருந்த நிவர் புயல் மெதுவாக மேற்கு நோக்கி நகர்ந்து வந்த நிலையில், தீவிர புயலாக மாறியிருப்பதாகக் கூறப்பட்டது. இதனிடையே புதுச்சேரிக்கு வடக்கே மரக்காணம் அருகே நவம்பர் 25 நள்ளிரவு 11.30 மணி அளவில் கரையை கடக்க தொடங்கிய நிவர் புயல், நவம்பர் 26 2.30 மணி வரை முழுவதும் கரையைக் கடந்தது. சென்னையில் தொடர்ந்து பெய்த வரும் கனமழையால், வேளச்சேரியில் சாலைகள் மற்றும் தெருக்களில் முழங்கால் அளவிற்கு மழைநீர் தேங்கி உள்ளது. மழைநீரில் கார்கள் பழுதடையாமல் தடுக்க, ரயில்வே மேம்பாலத்தின் மீது இருபுறமும் கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    தண்டையார்பேட்டையில் உள்ள திருவள்ளுவர் நகரே குளம்போல காட்சி அளிக்கிறது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ராயப்பேட்டை ஐஸ் ஹவுஸ் அருகே பிரதான சாலை, ஆறு போல காட்சியளிக்கிறது. சில இடங்களில் வாகனங்கள் பழுதாகி நின்றதால் அவற்றில் பயணித்தோர் சிரமத்திற்கு ஆளாகினர்.

    கனமழையால் ஈ.வெ.ராமசாமி சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. எழும்பூர் ரயில் நிலையத்தில் வடக்கு வாசல் அருகே சாலை முழுவதும் வெள்ள நீர் தேங்கி, வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் எழும்பூர் - சென்ட்ரல் இடையே போக்குவரத்து தடைபட்டது. தொடர் மழையால் வானகரம் பூச்சந்தை குட்டை போல் காட்சி அளிக்கிறது. இதனால் பூ வியாபாரம் செய்ய முடியாமல் வியாபாரிகளும், வாடிக்கையாளர்களும் சிரமத்திற்கு ஆளாகினர்.

    திருவொற்றியூரில் ராஜாஜி நகர், சக்தி கணபதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. குளம் போல் தண்ணீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பின்னர், அங்கு வந்த மாநகராட்சி பணியாளர்கள், ராட்சத மோட்டார்கள் மூலம் மழைநீரை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    சாலையில் பெருக்கெடுத்தும் ஓடும் மழைநீர்


    செங்கல்பட்டு அடுத்த ஊரப்பாக்கத்தில் உள்ள மகாவீரர் நகர் பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதித்துள்ளதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். அத்துடன், அன்றாட தேவைக்கான தண்ணீர், பால், உணவு பொருட்கள் கூட வாங்க முடியாதல் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

    நெய்வேலி என்எல்சியின் 3 திறந்தவெளி சுரங்கங்களிலும் மழை நீர் தேங்கி நிற்பதால், சேமிப்பில் உள்ள நிலக்கரியை வைத்து மின் உற்பத்தி நடைபெறுகிறது. கடலூர் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், தரைப்பாலத்தை தாண்டி தண்ணீர் வழிந்தோடுகிறது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.




    புயல் கடக்கும் சென்னையில் பெரிய அளவிலான பாதிப்புகள் இருக்கலாம் என்று அச்சம் இருந்தது. தற்போது, புயல் கரையைக் கடந்துள்ளநிலையில் சென்னையில் பெரிய அளவிலான பாதிப்புகள் இல்லை என்று தெரியவந்துள்ளது. சென்னையில் ஒரே நாளில் 67 மரங்கள் அடியோடு விழுந்துள்ளன என்று கணிக்கப்பட்டுள்ளன. சென்னையில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் சாலைகளில் முட்டளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளன. காற்றின் வேகம் அவ்வப்போது வேகமாக வீசி வருகிறது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Cyclone Nivar

    அடுத்த செய்தி