• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • உயிரைப் பணயம் வைத்து மின்கம்பங்களை சீரமைக்கும் மின்வாரிய ஊழியர்கள்

உயிரைப் பணயம் வைத்து மின்கம்பங்களை சீரமைக்கும் மின்வாரிய ஊழியர்கள்

மின்கம்பங்களை சீர் செய்யும் ஊழியர்

மின்கம்பங்களை சீர் செய்யும் ஊழியர்

Cyclone Gaja | கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் மின்கம்பங்களை சீரமைக்கும் பணிகளில் மின்வாரிய ஊழியர்கள் இரவு பகலாக உயிரைப் பணயம் வைத்து ஈடுபட்டுள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கஜா புயல் கடந்து சென்று 6 நாட்கள் ஆகிய நிலையில், மின்விநியோகம் சீரடையாததால் டெல்டா மாவட்டங்கள் தொடர்ந்து இருளில் மூழ்கியுள்ளன. சேதமடைந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகளை அப்புறப்படுத்துவதோடு, புதிய மின்கம்பங்களை நிறுவி இணைப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மின்வாரிய பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு மின் சீரமைப்புப் பணி நடைபெற்று வருகிறது. இவர்கள் நேரம் காலம் பாராது மழையில் நனைந்தவாறே உயிரைப் பணயம் வைத்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மின்வாரியத்திற்கு உதவியாக பொதுமக்களும் பல இடங்களில் சொந்த செலவில் வாகனங்களை அமர்த்தி மின்கம்பங்களை கொண்டு சேர்த்தனர்.

திருவாரூர் மாவட்டத்தில் 20 ஆயிரம் மின்கம்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நகர்புற பகுதிகளில் ஒருசில இடங்களில் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. கிராமப் புறங்களில் மின் இணைப்பு வழங்குவதற்காக மின்மாற்றிகளை சீரமைக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

நாகை மாவட்டத்தில், நெல்லையிலிருந்து வரவழைக்கப்பட்ட மின் ஊழியர்கள் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தண்ணீர் தேங்கிய வயல்வெளிகளுக்குள் மின்கம்பங்களை தூக்கிச் சென்று நடும் பணியை கடும் சிரமங்களுக்கிடையே ஊழியர்கள் மேற்கொண்டுள்ளனர்.

நாகையில் மின்பாதை சீரமைப்பு பணிகளை மின்துறை அமைச்சர் தங்கமணி ஆய்வு செய்தார். நியூஸ்18 செய்தியாளருக்கு அவர் அளித்த பிரத்யேகப் பேட்டியில், நாகை மாவட்டத்தின் நகர்ப்பகுதிகள் மற்றும் வேளாங்கண்ணியில் மாலைக்குள்ளும், ஊரகப்பகுதிகளில் ஓரு வாரத்திற்குள்ளும் 100 விழுக்காடு மின்விநியோகம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலும் வயல்வெளிகள் வழியாகவே மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வழக்கமாக காற்றடித்தால் கம்பங்கள் சாய்ந்துதான் விழும். ஆனால் கஜா புயல் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்களை முறித்துப் போட்டுள்ளது. இதனால் இக்கம்பங்களை மீண்டும் நட்டு பயன்படுத்த முடியாது. எனவே புதிதாக மின்கம்பங்கள் வரவழைக்கப்பட்டு நடப்பட்டு வருகின்றன. இதனால் தாமதம் தவிர்க்க முடியாதது என அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். வயல்வெளிகளுக்குள் ஜே.சி.பி. எந்திரங்களை கொண்டு செல்ல முடியாததால் ஊழியர்களே மின்கம்பங்களை சுமந்து செல்கின்றனர். கிராமப்புற மக்களின் அத்யாவசியத்தேவைகள் நகரங்களை சார்ந்திருப்பதால் நகர்ப்புற பகுதிகளுக்கு முதலில் முக்கியத்துவம் வழங்குவதாகவும் மின்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். இதனிடையே புதுக்கோட்டையில் மின்சாரம் தாக்கியதால் காயமடைந்த மின்ஊழியர்கள் இருவரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Also see...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: