வங்கக் கடலில் வங்கக் கடலில் நிலைக் கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை புயலாகவும் வலுப்பெறக்கூடிய சூழலில், இதன் காரணமாக தமிழகத்தில் 4 நாட்களுக்கு
மழை பெய்யக்கூடும் என்று
சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் செந்தாமரை கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக,
20.03.2022, 21.03.2022 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
22.03.2022 முதல் 24.03.2022 வரை: தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இலேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
நேற்று காலை தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது. இது வடக்கு திசையில் அந்தமான் நிக்கோபார் தீவு வழியாக நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதனை அடுத்த 12 மணி நேரத்தில் புயலாகவும் வலுபெறக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: Cyclone Asani: வங்க கடலில் நாளை உருவாகிறது அசானி புயல்... கனமழைக்கு வாய்ப்பு
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
20.03.2022,: அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
21.03.2022:அந்தமான் கடல், மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 85 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேலும் படிக்க: வேளாண் பட்ஜெட்டில் சிறுதானிய மண்டலங்கள் அறிவிப்பு - விவசாயிகள் வரவேற்பு
22.03.2022: மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் மியான்மர் கடலோர பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல், வட கிழக்கு வங்கக்கடல், தென்கிழக்கு வங்காளதேச கடலோர பகுதியில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
இப்பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.