முகப்பு /செய்தி /தமிழ்நாடு / சென்னையில் புதிதாக தொடங்கப்பட்ட 12 சைபர் கிரைம் பிரிவுகள்... தீர்த்து வைக்கப்பட்ட குற்றங்கள் எவ்வளவு தெரியுமா..?

சென்னையில் புதிதாக தொடங்கப்பட்ட 12 சைபர் கிரைம் பிரிவுகள்... தீர்த்து வைக்கப்பட்ட குற்றங்கள் எவ்வளவு தெரியுமா..?

கோப்புப் படம்

கோப்புப் படம்

சைபர் க்ரைம் போலீசார் மூலம் ரூபாய் 22 லட்சத்து 81,682 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :

சென்னையில் ஆன்லைன் பரிவர்த்தனைகளில் ஏமாற்றுதல், சமூக ஊடகங்களில் பண மோசடி, மொபைல் போன்களில் பண மோசடி, ஓ.டி.பி எண் பெற்று ஏமாற்றுதல், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மோசடி, இணையவழி ஏமாற்றுதல், இணையவழி மூலம் தனி நபர் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துதல், இணையவழியில் பெண்களை ஆபாசமாக சித்தரித்தல் போன்ற குற்ற செயல்கள் நாளுக்கு நாள் பெருகி வந்த நிலையில் அதனை தடுப்பதற்காக கடந்த 2003ஆம் ஆண்டு மத்திய குற்றப்பிரிவு - சைபர் கிரைம் போலீசார் பிரிவு தொடங்கப்பட்டது.

சென்னை காவல் ஆணையரகத்தில் இயங்கி வந்த மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவுக்கு தினமும் நூற்றுக்கணக்கான புகார்கள் வரத்தொடங்கின. இதனால் ஒரே இடத்தில் புகார் கொடுக்கும் புகார்தாரர்களுக்கும், புகாரைப் பெற்றுக்கொண்டு விசாரணை மேற்கொள்ளும் போலீசாருக்கும் நிறைய நடைமுறை சிக்கல்கள் இருந்து வந்தன. இதன் காரணமாகவே பல வழக்குகள் தற்போதும் நிலுவையில் இருந்து வருகிறது.

இதனை கருத்தில் கொண்டு புகார்தாரர்களுக்கு நேரவிரயத்தை தடுப்பதற்காக, சைபர் கிரைம் போலீசாருக்கு விசாரணை மேற்கொள்வதில் உள்ள நடைமுறைச் சிக்கலைத் தீர்த்து வைப்பதற்காகவும் கடந்த ஆகஸ்டு மாதம் 12 காவல் மாவட்டத்திலுள்ள துணை ஆணையர் அலுவலகத்தில் சைபர் கிரைம் பிரிவு துவங்கப்பட்டது.

இதனால் மக்கள் எளிமையாக சைபர் கிரைம் சார்ந்த புகார்களை நேரடியாகவும் ஆன்லைன் மூலமும் அளித்து வந்தனர்.

12 காவல் மாவட்டங்களிலும் புதிதாக தொடங்கப்பட்ட 12 சைபர் கிரைம் பிரிவுகளில் இதுநாள்வரை மொத்தம் 602 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதாவது வடக்கு மண்டலத்தில் 57 வழக்குகளும், தெற்கு மண்டலத்தில் 292 வழக்குகளும், கிழக்கு மண்டலத்தில் 115 வழக்குகளும், மேற்கு மண்டலத்தில் 138 வழக்குகள் என 602 புகார்களுக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவற்றில் 57 வழக்குகள் உடனுக்குடன் முடித்து வைக்கப்பட்டுள்ளன. மேலும் 250 வழக்குகள் முடியும் தருவாயில் உள்ளன.அதுமட்டுமல்லாமல் ரூபாய் 22 லட்சத்து 81,682 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக குமரன் நகரில் இன்ஸ்டாகிராம் மூலம் பெண்ணை துன்புறுத்திய வழக்கில் 18 வயதுக்கு உட்பட்ட ஒரு நபர் உடனடியாக கைது செய்யப்பட்டார். அதேபோல துரைப்பாக்கம் பகுதியில் டாட்டா கேப்பிட்டல்  ஃபெதெர் லைட் டெக் என்ற நிறுவனம் லோன் வாங்கி தருவதாக ரூபாய் 2 லட்சம் பணம் பறிக்க முயன்ற வழக்கில் போலி கால் சென்டர் நடத்திய நபர்களை சைபர் கிரைம் போலீசார் உடனுக்குடன் கைது செய்தனர்.

சூளைமேடு பகுதியில் அக்‌ஷய் என்ற கல்லூரி படிக்கும் மாணவருக்கு கடந்த 11ம் தேதி வங்கியில் இருந்து பேசுவதாக போன் கால் வந்துள்ளது. மாணவர் அக்‌ஷய் ஓ.டி.பி எண்ணை தர அவரது வங்கிக் கணக்கில் இருந்து 9849 ரூபாய் உடனடியாக காணாமல் போயுள்ளது.

இது குறித்து திருவல்லிக்கேணி சைபர் கிரைம் போலீசார் விசாரணை செய்தபோது அக்‌ஷயின் வங்கி கணக்கில் இருந்து மோசடி செய்யப்பட்ட பணம் ஸ்னாப்டீல் நிறுவனத்தில் மொபைல் ஆர்டர் செய்யப்பட்டிருப்பதாக தெரியவந்தது.  இதனையடுத்து ஸ்னாப்டீல் நிறுவனத்திடம் பேசிய போலீசார் உடனடியாக அந்த பணத்தை ஓரிரு நாட்களில் அக்‌ஷய்க்கு மீட்டு கொடுத்தனர்.

top videos

    தனித்தனியாக ஒவ்வொரு காவல் மாவட்டத்திலும் சைபர் கிரைம் பிரிவு தொடங்கப்பட்டதால், தேவையற்ற நேர விரயத்தை குறைப்பதாகவும், மேலும் சைபர் கிரைம் போலீசார் தங்களுடன் நட்பு ரீதியில் பழகி உடனுக்குடன் குற்றங்களை தீர்த்து வைப்பதாகவும் புகார்தாரர்கள் தெரிவித்து வருகின்றனர்.

    First published:

    Tags: Chennai, Cyber attack