முகப்பு /செய்தி /தமிழ்நாடு / காப்பான் ஓடும் தியேட்டரில் தனியாக ஆக்‌ஷன் படம் காட்டிய அமமுக பிரமுகர்கள்! - வீடியோ

காப்பான் ஓடும் தியேட்டரில் தனியாக ஆக்‌ஷன் படம் காட்டிய அமமுக பிரமுகர்கள்! - வீடியோ

சிசிடிவி காட்சிகள்

சிசிடிவி காட்சிகள்

  • Last Updated :

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் காப்பான் திரையிடப்பட்ட திரையரங்க மேலாளரை ஒருகும்பல் சுற்றி வளைத்து கடுமையாக தாக்கியுள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த குமராட்சி அமமுக ஒன்றிய செயலாளராக இருப்பவர் மில்லர். இவர் தனது மனைவியுடன் வியாழக்கிழமை இரவு காப்பான் படம் பார்க்க வடுகநாதன் திரையரங்கிற்கு சென்றிருக்கிறார். வாகனத்தை பார்க்கிங்கில் நிறுத்தாமல் தனியாக நிறுத்த மில்லர் முயன்றிருக்கிறார்.

அதை பார்த்த ஊழியர்கள் பார்க்கிங்கில் விட்டு செல்ல அறிவுறுத்தி இருக்கின்றனர். ஆனால், அதை ஏற்க மறுத்த மில்லர் ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்தார். சத்தம் கேட்டு அங்கு வந்த திரையரங்க மேலாளர் மரி அலெக்சாண்டரும் பார்க்கிங்கில் நிறுத்துமாறு வலியுறுத்தி இருக்கிறார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

மனைவியுடன் வந்ததால் வந்து கவனித்துக் கொள்கிறேன் என்று கூறிச்சென்ற அமமுக ஒன்றிய செயலாளர் மில்லர், படம் முடியும் நேரத்தில் அதே பகுதியைச் சேர்ந்த அமமுக வழக்கறிஞர் பிரபு உள்ளிட்ட 12 பேரை அழைத்து வந்து மேலாளர் மரிஅலெக்சாண்டரை சரமாரியாக தாக்கினார்.

தாக்குதலில் ஈடுபட்ட கூலிப்படையினர் கைகளில் கிடைத்த பொருட்கள் எல்லாம் கொண்டு திரையரங்கு மேலாளரை விரட்டி, விரட்டி தாக்கினர். மேலும், அங்குள்ள கண்ணாடி,விளக்குகள் உள்ளிட்ட பொருட்களையும் அடித்து உடைத்தனர். அதன் பிறகும் அடங்காமல் அவரை கையை உடைத்து கொலை செய்ய முயன்றதாகவும் கூறப்படுகிறது.

தாக்குதலை நடத்திவிட்டு கூலிப்படையினர் தப்பியோடிய நிலையில், படுகாயமடைந்த மேலாளர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். தாக்குதல் சம்பவம் தொடர்பாக அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்த சிதம்பரம் போலீசார், கொலை முயற்சி, பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் 12 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர்.

இதைத் தொடர்ந்து அமமுக பிரமுகர் மில்லர், சந்தோஷ், நிவாஷ், அரவிந்தராஜ், கிருபாகரன் ஆகிய ஐந்து பேரை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள வழக்கறிஞர் பிரபு உள்ளிட்ட 7 பேரை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். இருசக்கர வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட சிறிய தகராறு கொலை வெறி தாக்குதலில் முடிந்த சம்பவம் திரையரங்கிற்கு வந்த ரசிகர்களை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

top videos

    First published:

    Tags: Cuddalore