கடலூர் : கள்ளச்சாரயம் குடித்த பள்ளி மாணவர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

மாதிரிப் படம்

கடலூர் அருகே கள்ளச்சாராயத்தை குடித்த பள்ளி மாணவர்கள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 • Share this:
  கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள புலியூர் கிராமத்தை சேர்ந்த அன்பரசன், தமிழ்மாறன், கபிலன் ஆகியோர் பள்ளியில் படித்து வருகிறார்கள். கொரோனா அச்சுறுத்தலால் பள்ளிகள் விடுமுறை அறிவக்கப்பட்டுள்ளதால், இவர்கள் கிரிக்கெட் விளையாடி பொழுதைக் கழித்து வந்தனர்.

  வியாழக்கிழமை மாலை கிரிக்கெட் விளையாடிவிட்டு மாலை வீடு திரும்பும் போது அங்குள்ள கரும்புத் தோட்டத்தின் வழியாக சென்று கொண்டிருந்தனர். அபபோது கரும்புத் தோட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக ஊறல் போடப்பட்டிருந்ததைக் கவனித்தனர். ஆர்வமிகுதியில் அருகில் சென்று பார்த்த அவர்களுக்கு பழங்கள் மற்றும் எத்தனால் வாசனையுடன் இருந்த கள்ளச்சாராயத்தை குடித்து பார்க்க வேண்டும் எனத் தோன்றியுள்ளது.

  அப்பகுதியில் யாரும் இல்லாத நிலையில், கள்ளச்சாராயம் காய்ச்ச போடப்பட்டிருந்த ஊறலிலிருந்து 3 மாணவர்களும் சிறிது குடித்துள்ளனர். அதன்பின் வீட்டிற்குச் சென்ற அவர்கள் ஒருவர் பின் ஒருவராக மயங்கி கீழே விழுந்துள்ளனர். பதறிப்போன மாணவர்களின் பெற்றோர் அவர்களை கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதில் 10ம் வகுப்பு படித்து வரும் அன்பரசன் என்ற மாணவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மூன்று மாணவர்களும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

  கரும்புத் தோட்டத்தில் சாராய ஊறல் அமைத்தவர்கள் யார் என்பது குறித்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், பூபாலன் என்பவரை கைது செய்துள்ளனர். அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. பள்ளி மாணவர்கள் சாராய ஊறல் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  Published by:Vijay R
  First published: