கடலூர் முதுநகரில் பேஷியல் செய்வது போல் நடித்து மயக்க மருந்து தெளித்து அழகு நிலைய உரிமையாளரிடம் 9 பவுன் நகையை திருடிச் சென்ற பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கடலூர் முதுநகர் குமரன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுதா. இவர் கடலூர் இம்பீரியல் சாலையில் அழகுநிலையம் நடத்தி வருகிறார். இந்த அழகு நிலையத்துக்கு 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வந்து பேஷியல் செய்து கொண்டுள்ளார். அப்போது அந்த பெண் சுதாவிடம் பேச்சு கொடுத்து உங்களது தொழிலுக்கு நான் பல உதவிகளை செய்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறியதாகவும், அதனை நம்பிய அழகு நிலைய உரிமையாளர் சுதா, அந்த பெண்ணை கடலூர் முதுநகர் குமரன் கோவில் தெருவில் உள்ள தனது மற்றொரு அழகு நிலையத்தை காண்பிக்க அழைத்து சென்றுள்ளார்.
அப்போது அந்த பெண் அருகில் இருந்த கடைக்கு சென்று 2 குளிர்பானங்களை வாங்கி அதனை 2 பேரும் அழகுநிலையத்தில் வைத்து குடித்த நிலையில் அந்த பெண் தான் குடித்து கொண்டிருந்த குளிர்பானத்தை தெரியாமல் கீழே கொட்டுவது போல கொட்டியுள்ளார். இதைபார்த்த சுதா அதனை அகற்றி சுத்தம் செய்ய முயன்ற போது அந்த பெண் சுதாவின் முகத்தில் மயக்க மருந்தை தெளித்ததாகவும் இதனால் சுதா அங்கேயே மயங்கி விழுந்து சிறிது நேரம் கழித்து எழுந்து பார்த்தபோது, அவரது கழுத்தில் கிடந்த 9 பவுன் நகையை காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அதனை அந்த மர்ம பெண் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. அதன்மதிப்பு சுமார் 3 லட்சத்து 70 ஆயிரம் இருக்கும் என கூறப்படும் நிலையில் இது குறித்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பேஷியல் செய்வது போல் நடித்து நகையை திருடிச்சென்ற இளம்பெண்ணை சிசிடிவி காட்சிகள் மூலம் வலைவீசி தேடி வருகின்றனர்.
செய்தியாளர் : பிரேம் ஆனந்த்
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.