முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கடலூர் எம்.பி. ரமேஷை ஒருநாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு

கடலூர் எம்.பி. ரமேஷை ஒருநாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு

திமுக எம்.பி ரமேஷ்

திமுக எம்.பி ரமேஷ்

சிபிசிஐடி போலீஸார் எம்.பி. ரமேஷை ஒருநாள் காவலில் எடுத்து விசாரணை நடத்துவதற்கு கடலூர் குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்தது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தொழிலாளி கோவிந்தராசு கொலை வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைந்த கடலூர் எம்.பி. ரமேஷ் இன்று கடலூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை சிபிசிஐடி போலீஸார் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிப்பதற்கு நீதிபதி பிரபாகர் உத்தரவிட்டார்.

கடலூர் எம்.பியான டி.ஆர்.வி.ரமேஷ்க்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலை பண்ருட்டி அருகேயுள்ள பனிக்கன்குப்பத்தில் செயல்பட்டு வருகிறது. இந்தத் தொழிற்சாலையில் மேலமாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராசு என்ற தொழிலாளி வேலை பார்த்து வந்தார். அவர் கடந்த மாதம் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இது குறித்து காடாம்புலியூர் காவல்துறையினர் மர்ம மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணையை நடத்தி வந்தனர். இந்நிலையில், இந்த வழக்கை தமிழக அரசு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றி உத்தரவிட்டது. இது குறித்து சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் பனிக்கன்குப்பம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதற்கிடையில், உயிரிழந்த கோவிந்தராசுவின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் கோவிந்தராசு அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்நிலையில், கடந்த 8ஆம் தேதி ரமேஷ் எம்.பி. உள்ளிட்ட 6 பேர் மீது சிபிசிஐடி கொலை வழக்குப் பதிவு செய்தது. பின்னர், 9ஆம் தேதி அதிகாலை ரமேஷின் எம்.பி-யின் முந்திரி தொழிற்சாலையில் பணியில் இருந்த அல்லா பிச்சை, சுந்தர்ராஜ், கந்தவேல், வினோத் மற்றும் ரமேஷின் உதவியாளராக இருக்கும் நடராஜன் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

இந்நிலையில் கடந்த 11ஆம் தேதி நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை 2 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் அவர் கடலூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, இன்று காலை அவர் கடலூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

Must Raed : சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி ஏமாற்றி, பல பெண்களுடன் உல்லாசம் அனுபவித்து மிரட்டிய போலி இயக்குனர் கைது

அப்போது, சிபிசிஐடி போலீஸார் ரமேஷ் எம்.பியை காவலில் எடுத்து விசாரணை நடத்த நீதிமன்றத்தில் மனு அளித்தனர். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி பிரபாகர், ஒருநாள் காவலில் எடுத்து சிபிசிஐடி விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

First published:

Tags: Cuddalore, Murder case