முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கடலூரில் அமையவுள்ளது புதிய சுரங்கம்... 8,751 குடும்பங்களை வெளியேற்ற திட்டம்!

கடலூரில் அமையவுள்ளது புதிய சுரங்கம்... 8,751 குடும்பங்களை வெளியேற்ற திட்டம்!

சுரங்கத்திற்கான திட்டம்

சுரங்கத்திற்கான திட்டம்

  • 2-MIN READ
  • Last Updated :

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் மற்றும் புவனகிரி தாலுகாக்களில் 4842 ஹெக்டேர்  நிலப்பரப்பில் பழுப்பு நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு திட்டம் வகுகப்பட்டுள்ளது.

நெய்வேலி அனல் மின் திட்டத்திற்காக சுரங்கம் 1, சுரங்கம் 1-ஏ, சுரங்கம் 2 என ஏற்கனவே 3 நிலக்கரிச் சுரங்கங்களை என்எல்சி அமைத்துள்ளது. இதற்காக 45 ஊர்களில் நிலங்களை கையகப்படுத்தியிருந்தது. இந்த நிலையில்

தமிழ்நாட்டின் மின் தேவையை கருத்தில் கொண்டு கடலூரில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள 1320 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட  அனல்மின் நிலையத்திற்காக இந்த புதிய பழுப்பு நிலக்கரி சுரங்கம் அமைக்கப்படவுள்ளதாக என்.எல்.சி. தெரிவித்துள்ளது.

4841.99 ஹெக்டேர் நிலப்பரப்பு என்பது வெறும் நான்கிலக்க எண்ணாக தெரிந்தாலும் அதன் ஒட்டுமொத்த பரப்பளவு 26 கிராமங்களை உள்ளடக்கியது. சின்ன நெற்குணம், கோ.ஆதனூர், பெருவரப்பூர், பெருந்துறை, ஒட்டிமேடு, வலயமாதேவி கீழ்பாதி, கோட்டுமுளை, சிறுவரப்பூர், புதூர், சாத்தப்பாடி, அகரலாம்பாடி, பி.ஆதனூர், தர்மநல்லூர், பெரிய நெற்குணம், விளக்கப்பாடி, யு.அகரம், எறும்பூர், வளையமாதேவி மேல்பாதி, யு.ஆதனூர், கோபாலபுரம், யு.கொளப்பாக்கம், கம்மாபுரம், சு.கீனணூர், குமாரமங்கலம், வீரமுடையான்நத்தம் உள்ளடக்கிய 26 கிராமங்கள் இத்திட்டத்தால் பாதிக்கப்படவுள்ளன.

2011ஆம் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி பார்த்தால் இந்த கிராமங்களில் மொத்தமாக 14,061 வீடுகளில் 54,315 பேர் வசிக்கின்றனர். இவர்களின் பிரதான தொழிலாக விவசாயமே உள்ளது.   சுரங்கம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள பகுதியில் 473.35  மில்லியன் டன் பழுப்பு நிலக்கரி இருப்பு உள்ளதாகவும் அதில் 415.37 மில்லியன் டன் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கப்படும் என்றும் என்.எல்.சி. நிறுவனம் தெரிவிக்கிறது.

இத்திட்டத்திற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்தபோது கடும் எதிர்ப்பையும் போராட்டத்தையும் சந்தித்தது. இந்த திட்டத்திற்கு எதிராக  தொடர்ச்சியாக அப்பகுதி மக்களை திரட்டி போராடு வரும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகனிடம் பேசியபோது " 3 சுரங்கங்களின் நிலக்கரியே என்.எல்சி.யின் தேவைக்கு அதிகமாகும். அந்த உபரி நிலக்கரியை பிற நிறுவனங்களுக்கு விற்று பெரும் பணலாபம் சம்பாதித்து வருகிறது என்.எல்.சி.

மேலும், முந்தைய 3 சுரங்கங்களுக்காக கையகப்படுத்திய நிலங்களில் 10,000 ஏக்கருக்கும் மேல் உபரி நிலம் உள்ளது. இந்த நிலங்களை இதுவரை பயன்படுத்தப்படுத்தவில்லை. அப்படியிருக்க 3ஆவது சுரங்கத்திற்கென நிலம் கையகப்படுத்துவது ஏன் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. தேவைக்கும் அதிகமான நிலம் இருக்கும்போது, மீண்டும் நிலம் கையகப்படுத்துவது ஏன் என்பதை என்.எல்.சி. தெரிவிக்க வேண்டும்.

என்.எல்.சியைப் பொறுத்தவரை, ஏற்கனவே கையகப்படுத்திய நிலங்களுக்கு உரிய இழப்பீடோ, நில உரிமையாளர்களுக்கு வேலைவாய்ப்போ, கிராமங்களுக்கான கட்டமைப்பு வசதிகளோ எதையும் இதுவரை முறையாக வழங்கவில்லை. தமிழக அரசு செய்ய வேண்டியதெல்லாம், உடனடியாக இந்த நிலம் கையகப்படுத்தலைத் தடுத்து நிறுத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் திட்டத்தால் பாதிப்படைபவர்கள் குறித்த சமூக தாக்க ஆய்வொன்றை என்.எல்.சி. நிறுவனம் தயாரித்து சுற்றுச்சூழல் அனுமதிகோரி விண்ணப்பம் செய்துள்ளது.

அதில், இத்திட்டத்திற்காக வீடுகளை இழந்து வெளியேற வேண்டிய மக்கள் அனைவரின் பிரதான தொழில் நிலத்தை அடிப்படையாக வைத்தே இருப்பதால் பாதிப்புகளை குறைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளது.

சமூக தாக்க ஆய்வு: என்.எல்.சி. நிறுவனத்தின் ஆய்வின் படி 11 கிராமங்கள் முழுமையாகவும், 19 கிராமங்கள் பகுதியாகவும் பாதிக்கப்படும். இந்த சுரங்கத்தால் 2,420பேர் தங்கால் நிலத்தை இழப்பார்கள். 6,331 பேர் தங்கள் தங்கள் நிலத்தையும் , வீடுகளையும் இழப்பார்கள். ஒட்டுமொத்தமாக 8,751 குடும்பங்கள் திட்டத்தால் பாதிப்படைவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

வீடுகளை இழக்கும் குடும்பங்களை எருமானூர், கோபுராபுரம், காணாதுகண்டான், சின்னபண்டாரங்குப்பம் ஆகிய நான்கு கிராமங்களில் மறுகுடியமர்வு செய்ய என்.எல்.சி. திட்டமிட்டுள்ளது. பாதிப்படையும் அனைவருக்கும் "நியாயமான  இழப்பீடு பெறும் உரிமை, மறு வாழ்வு, மறு குடியமர்வு மற்றும் நிலம் கையகப்படுத்தலில் வெளிப்படைத்தன்மை" சட்டத்தின் கீழ் உரிய இழப்பீடு மற்றும் மாற்று இடம் வழங்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்காக ஒரு குடும்பத்திற்கு 11.13 லட்சம் வீதம் மொத்தமாக 8751 குடும்பங்களுக்கு 705கோடி செலவிட என்.எல்.சி. திட்டமிட்டுள்ளது. நிலம் கையகப்படுத்திய பின்னர் சுரங்கம் அமையவுள்ள பகுதியைச் சுற்றி கல்வி, கட்டமைப்பு வசதி மேம்பாடு, சுகாதாரம், வேளாண்மை, விவசாயம், குடிநீர், மகளிர் மேம்பாடு போன்றவற்றிற்காக பல்வேறு திட்டங்களை என்.எல்.சி. மேம்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால், இந்த முறை நாங்கள் ஏமாற மாட்டோம் என்பதே அப்பகுதியில் வசிக்கும் பெரும்பான்மையான விவசாயிகளின் குரலாக உள்ளது. கடந்த மார்ச் 6ஆம்  தேதி இத்திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரி மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் என்.எல்.சி.

நிர்வாகம் சமர்ப்பித்த  விண்ணப்பத்தில் சில குறைபாடுகள் இருந்ததால் அதை  திருத்தி மீண்டும் சமர்ப்பிக்குமாறு மத்திய சுற்றுச்சூழல் துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக என்.எல்.சி. தொடர்பாக விண்ணப்பம் செய்த அதிகாரி பிரகாஷின் கருத்தைப் பெற எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.

Also see...

First published:

Tags: Cuddalore