கடலூரில் கள்ளக்காதல் விவகாரத்தில் ரவுடியின் மனைவி வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் குப்பங்குளத்தை சேர்ந்தவர் ரவுடி கிருஷ்ணன். இவர் மீது கொலை, ஆள்கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவரது மனைவி காந்திமதி (வயது 30). இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது. கிருஷ்ணனுக்கு அதேப்பகுதியை பிரபல ரவுடி வீரா என்கிற வீராங்கனை தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்தார். இந்த வழக்கில் கெடிலம் போலீஸார் கிருஷ்ணனை கைது செய்தனர்.
தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை பிடிப்பதற்காக கிருஷ்ணனை மட்டும் அழைத்துக்கொண்டு போலீஸார் சென்றுள்ளனர். அப்போது போலீஸ் பிடியில் இருந்து தப்பித்து செல்வதற்காக சப் இன்ஸ்பெக்டரின் கழுத்தை அறுக்க முயன்றுள்ளான். இதனையடுத்து தற்காப்புக்காக சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணனை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் கிருஷ்ணன் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கிருஷ்ணனின் மனைவி காந்திமதியை நான்கு பேர் கொண்டு கும்பல் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது. ரத்த வெள்ளத்தில் சாலையில் சரிந்த காந்திமதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் காந்திமதி உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கள்ளக்காதல் விவகாரத்தில் காந்திமதி கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. கிருஷ்ணன் மறைவுக்கு பின்னர் அவரது கூட்டாளியான அரவிந்த் (வயது 23) உடன் காந்திமதிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து காந்திமதியின் வீட்டுக்கு அரவிந்த் அடிக்கடி வருகை புரிந்துள்ளார். இருவரும் தனிமையில் இருந்து வந்துள்ளனர். இதனையறிந்த காந்திமதியின் உறவினர்கள் அவரை கண்டித்துள்ளனர்.
இதன்காரணமாக அரவிந்த் உடன் பழகுவதை காந்திமதி நிறுத்தியுள்ளார். வீட்டுக்கு வரவேண்டாம் என கண்டிப்புடன் கூறியுள்ளார். இதனால் ஆத்திமடைந்த அரவிந்த் எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்க கூடாது. உன்னை என்ன செய்கிறேன் பார் என மிரட்டிச் சென்றுள்ளார். இதனை காந்திமதி தன் உறவினர்களிடமும் கூறியுள்ளார். அரவிந்த் பேச்சை அவர்கள் கடுமையாக எடுத்துக்கொள்ளவில்லை. இதனை அறிந்த அரவிந்த மேலும் ஆத்திரப்பட்டுள்ளார்.
காந்திமதியை தீர்த்துக்கட்ட வேண்டும் என தன் நண்பர்களிடம் கூறியுள்ளார். காந்திமதி இரவு கடைக்கு சென்று வீடு திரும்புபோது அரவிந்த் கூட்டாளியான 16 வயது சிறுவன் காந்திமதியை தனது இருசக்கரவாகனத்தில் இறக்கிவிடுவதாக கூறி அழைத்துச்சென்றுள்ளார். அவர்களின் திட்டப்படி காந்திமதி அவரது தெருவில் வைத்து அரவிந்த் மற்றும் அவனது கூட்டாளிகள் வெட்டிக்கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து நான்கு பேரையும் போலீஸார் கைது செய்தனர். அரவிந்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 18 வயதுக்குட்பட்ட 3 சிறுவர்களையும் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.