திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நெல்லிக்குப்பம் நகராட்சித் தலைவர் பதவிக்கு திமுகவினர் போட்டியிட்டு வெற்றி பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. கட்சித் தலைமை எச்சரித்தும் நகராட்சித் தலைவர் பதவி விலக மறுத்துள்ள நிலையில், திமுக சார்பில் துணைத் தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் இருந்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சித் தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் கடந்த 4ம் தேதி நடைபெற்றது. இதில் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சித் தலைவர் பதவி திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. எனினும், திமுக வேட்பாளர் ஜெயந்தி போட்டி வேட்பாளராக மனுதாக்கல் செய்து வெற்றி பெற்றார்.
விசிகவிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் திமுக வெற்றி பெற்றதால் விசிகவினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார். எனினும், நெல்லிக்குப்பம் நகராட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய ஜெயந்தி ராதாகிருஷ்ணன் மறுப்பு தெரிவித்து வருகிறார்.

ஜெயபிரபா
இந்நிலையில், துணைத் தலைவருக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுகவைச் சேர்ந்த ஜெயபிரபா என்பவரை பதவி விலகச் செய்து, அந்த இடத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு கொடுக்க திமுக தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதனடிப்படையில் துணைத் தலைவர் பதவியிலிருந்து ஜெயபிரபா பதவி விலகினார்.
இதையும் படிங்க: மின்சாரம், சிசிடிவி கேமரா துண்டிப்பு... நகைக்கடை கொள்ளையில் வடமாநில கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?
தற்போது, நெல்லிக்குப்பம் துணைத் தலைவர் பதவியை விடுதலை சிறுத்தைகள் கட்சி ஏற்றுக்கொள்ளுமா அல்லது தலைவர் பதவிக்காக தொடர்ந்து முயற்சிக்குமா என்பது முக்கிய கேள்வியாக எழுந்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.