• HOME
 • »
 • NEWS
 • »
 • tamil-nadu
 • »
 • தொழிலாளர் கொலையில் திமுக எம்.பி சரண்.. மரண வழக்கு கொலை வழக்காக விசாரிக்கப்பட்ட காரணம் என்ன?

தொழிலாளர் கொலையில் திமுக எம்.பி சரண்.. மரண வழக்கு கொலை வழக்காக விசாரிக்கப்பட்ட காரணம் என்ன?

திமுக எம்.பி ரமேஷ்

திமுக எம்.பி ரமேஷ்

தோட்டத்தொழிலாளி கோவிந்தராஜ் மர்ம மரண வழக்கு தொடர்பாக இதுவரை ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் முதல் குற்றவாளியான திமுக எம்.பி போலீசாரிடம் சரண்டைந்துள்ளார். 

 • Share this:
  கடலூர் மாவட்டத்தில் முந்திரி தொழிற்சாலையில் தொழிலாளி உயிரிழந்த வழக்கில், தொழிற்சாலையின் உரிமையாளரும் திமுக எம்பியுமான ரமேஷ், தலைமறைவாகியிருந்த நிலையில் தற்போது போலீசாரிடம் சரணடைந்துள்ளார்.

  கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மேல்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பாமக நிர்வாகி கோவிந்தராஜ். இவர் திமுக எம்பி ரமேஷுக்கு சொந்தமாக பண்ருட்டி அருகில் பணிக்கன் குப்பம் என்ற இடத்தில் உள்ள முந்திரி ஆலையில், கடந்த 5 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வந்தார். செப்டம்பர் 19ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வேலைக்குச் சென்றவர் சடலமாக மீட்கப்பட்டார். அவர் தற்கொலை செய்து கொண்டார் என தொழிற்சாலை நிர்வாகம் கூற, அவரது சடலத்தில் காயங்கள் காணப்பட்டன.எம்.பி.யும், அவரது ஆதரவாளர்களும் தனது தந்தையைத் தாக்கி கொலை செய்து விட்டதாக, கோவிந்தராஜின் மகன் செந்தில்வேல் காடாம்புலியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்

  இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பாமக வழக்கறிஞர் கே.பாலு வழக்கு தொடுத்தார். உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில், செப்டம்பர் 23ம் தேதி, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வை முடித்தனர் .இதற்கிடையே இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்தார்.

  Also Read: ஸ்ரீபெரும்புதூரில் பதுங்கிய ஜார்க்கண்ட் கொள்ளையர்கள்.. போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொலை- நடந்தது என்ன?

  இதனையடுத்து செப்டம்பர் 28ம் தேதி விசாரணை தொடங்கியது, கோவிந்தராஜ் அடித்துக் கொல்லப்பட்டதாக உடன் பணிபுரிந்த தொழிலாளர்கள் வாக்குமூலம் அளித்தனர். செப்டம்பர் 19ம் தேதி இரவு கோவிந்தராஜை காடாம்புலியூர் காவல்நிலையத்திற்கு தொழிற்சாலை நிர்வாகத்தினர் அழைத்து வந்த சிசிடிவி காட்சிகளையும் சிபிசிஐடி போலீசார் கைப்பற்றினர்

  இதுவரை நடந்த விசாரணையில், திமுக எம்பி ரமேஷ் மற்றும் அவர்களின் ஊழியர்கள் 5 பேர் சேர்ந்து கோவிந்தராஜை அடித்து விஷம் கொடுத்துக் கொலை செய்தது தெரியவந்ததாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கொலை, தடயங்களை மறைப்பது, சதிதிட்டம், கூட்டு சதி, கூட்டாக சேர்ந்து தாக்குதல் ஆகிய 6 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

  Also Read: காசு கொடுத்தால் சர்வே பண்றேன் - லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக சிக்கிய சர்வேயர்

  விசாரணையின் போது கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், நடராஜன், கந்தவேல், அல்லாபிச்சை, வினோத், சுந்தரராஜன் ஆகிய 5 ஊழியர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.முதல் குற்றவாளியான திமுக எம்பி ரமேஷ், தலைமறைவாகியிருந்தார் அவரை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்தன.

  இந்நிலையில் தேடப்பட்டுவந்த திமுக எம்.பி ரமேஷ் பண்ருட்டி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் திங்கள் காலை சரண் அடைந்தார். உயிரினும் போற்றும் என் தலைவரின் நல்லாட்சியின் மீது வீண்பழி வீசுபவர்களுக்கு மேலும் இடம் கொடுத்திட வேண்டாம் எனக் கருதி சி.பி.சி.ஐ.டி. பதிவு செய்த வழக்கில் நான் நீதிமன்றத்தில் சரணடைகிறேன் என அறிக்கையில் ரமேஷ் கூறியுள்ளார்.  தன் மீதான குற்றங்களை சட்டப்படி பொய் என நிரூபித்து வெளியே வருவேன் என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். சரண் அடைந்த திமுக எம்.பியை கைது செய்து சிறையில் அடைக்க போலீசார் குவிக்கப்பட்டனர். ஜாமின் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக எம்.பி ரமேஷ் தரப்பில் இன்று மனுதாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொலை வழக்கில் ஆளும்கட்சியின் எம்.பி ஒருவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ள விவகாரம் அரசியல் தளத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Ramprasath H
  First published: