கடலூர் திமுக எம்பி ரமேஷுக்குச் சொந்தமான முந்திரி கம்பெனியில் ஊழியர் கோவிந்தராஜ் மர்ம மரணம் அடைந்த வழக்கில் எம்பி யின் ஊழியர்கள் 5 பேரை கைது செய்தனர் சிபிசிஐடி போலீசார். எம்பி ரமேஷ் தலைமறைவாகியிருக்கிறார். அவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திமுக எம்பி ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஆலை கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகில் பணிக்கன் குப்பம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இங்கே வேலை செய்த கோவிந்தராஜ் என்ற தொழிலாளி கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி இரவு மர்மமான முறையில் மரணமடைந்தார். அவரை எம்.பி.யும், அவரது ஆட்களும் தாக்கிக் கொலை செய்துவிட்டார்கள் என்று கோவிந்தராஜின் மகன் செந்தில்வேல் காடாம்புலியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இதற்கிடையே பாமக பிரமுகரான வழக்கறிஞர் கே பாலு இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பெயரில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள் கோவிந்தராஜ் உடலை கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி விழுப்புரம் மாவட்ட மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து முடித்தனர்.
கோவிந்தராஜ் மர்ம மரண வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்த நிலையில் ADSP கோமதி தலைமையில் சிபிசிஐடி கடந்த செப்டம்பர் மாதம் 28 ம் தேதி விசாரணை தொடங்கியது. கடலூர் சிபிசிஐடி ஆய்வாளர் தீபா உடன் சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி முதல்கட்ட விசாரணையைத் துவக்கினார்கள்.
Also Read: DC vs RCB | டாஸ் வென்ற விராட் கோலி.. ரிஷப் பந்த் அழுகை.. ஐபிஎல் சுவாரஸ்யம்…
புதுப்பேட்டை இன்ஸ்பெக்டரும் காடம்புலியூர் காவல் நிலையத்தின் பொறுப்பு இன்ஸ்பெக்டருமான நந்தகுமார், சம்பவம் நடந்த மறுநாள் செப்டம்பர் 20ஆம் தேதி, காலையில், திமுக எம்பி ரமேஷுக்கு சொந்தமான கம்பெனிக்கு சென்று விசாரணை நடத்தியுள்ளார். சம்பவத்தை நேரடியாகப் பார்த்த சில தொழிலாளிகளிடம் விசாரணை செய்தபோது கோவிந்தராஜை எப்படியெல்லாம் அடித்து கொடுமை செய்தார்கள் என்று சண்முகம், சுந்தர் உள்ளிட்ட தொழிலாளர்கள் போலீஸாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்கள். அந்த வாக்குமூலங்கள் உள்ளடக்கிய கேஸ் டைரியும் சிபிசிஐடி போலீஸார் வசம் ஒப்படைக்கப்பட்டது.
Also Read: தலைதூக்கும் மின்வெட்டு ஆபத்து.. தமிழக மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி.. சமாளிக்குமா அரசு?
அந்த இரவில் கோவிந்தராஜை காடம்புலியூர் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்த சிசிடிவி கேமரா காட்சிகள் மற்றும் கோவிந்தராஜை காவலர்கள் எடுத்த படம் ஆகியவற்றை சேகரித்துக் கொண்ட கடலூர் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்திய நிலையில், திமுக எம்பி ரமேஷ் மற்றும் அவரின் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் 5 பேர் சேர்ந்து கோவிந்தராஜை அடித்து, விஷம் கொடுத்து கொலை செய்தது அம்பலமானது. இதனைத் தொடர்நது சிபிசிஐடி போலீசார் ஊழியர்கள் 5 பேரை கொலை வழக்கில் கைது செய்தனர். எம்.பி ரமேஷ் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எம்பி ரமேஷ் தலைமறைவாகியிருக்கும் நிலையில் அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
செய்தியாளர் பிரேம் - கடலூர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cuddalore, DMK, News On Instagram