பேரூராட்சி முன்னாள் செயல் அலுவலரின் கையெழுத்தை போலியாக போட்டு ரூ.90 லட்சம் மோசடி.. கணினி ஆபரேட்டர் கைது
பேரூராட்சி முன்னாள் செயல் அலுவலரின் கையெழுத்தை போலியாக போட்டு ரூ.90 லட்சம் மோசடி.. கணினி ஆபரேட்டர் கைது
கைது செய்யப்பட்ட வீரமணி
Cuddalore District : புவனகிரி போலீசார் தினக்கூலி கணினி ஆபரேட்டர் வீரமணி மீது மோசடி, போலி ஆவணம் தயாரித்தல் உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
சிதம்பரம் அருகே புவனகிரி பேரூராட்சியில் முன்னாள் செயல் அலுவலரின் கையெழுத்தை போலியாக போட்டு சுமார் 90 லட்சம் மோசடி செய்துள்ள கணினி ஆபரேட்டரான தினக்கூலி ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்த கார், செல்போன் ஆகியவற்றை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிதம்பரம் அருகே உள்ள புவனகிரி பேரூராட்சியில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் கீழமணக்குடி கிராமத்தைச் சேர்ந்த வீரமணி (29) என்பவர் தினக்கூலி அடிப்படையில் கணினி ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இவர் புவனகிரி பேரூராட்சி முன்னாள் செயல் அலுவலரின் கையெழுத்தை போலியாக போட்டு கடந்த ஆண்டு பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தற்போதைய புவனகிரி பேரூராட்சி செயல் அலுவலர் அருள்குமார் புவனகிரி போலீசில் ஒரு புகார் அளித்திருந்தார்.
அந்த புகாரில், முன்னாள் செயல் அலுவலரான சாதிக்பாட்சா என்பவரின் கையெழுத்தை வீரமணி போலியாக போட்டு திட்டப்பணி காசோலை புத்தகத்தின் இரண்டு காசோலை மூலம் போலி கையெழுத்து போட்டு மொத்தம் 90 லட்சத்து 93 ஆயிரத்து 400 ரூபாய் கையாடல் செய்து இருப்பதாகவும், இதற்காக போலியான ஆவணங்களை தயார் செய்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
அதன்பேரில் புவனகிரி போலீசார் தினக்கூலி கணினி ஆபரேட்டர் வீரமணி மீது மோசடி, போலி ஆவணம் தயாரித்தல் உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து அவரை கைது செய்த புவனகிரி போலீசார் அவருடைய கார் மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர். அவர் மோசடியில் ஈடுபட்டது எப்படி என்றும், வேறு யாரேனும் இதற்கு உடந்தையாக இருந்தார்களா எனவும் பல்வேறு கோணங்களில் புவனகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் : பிரசன்ன வெங்கடேசன்
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.