கடலூர் மாவட்டம் செம்மண்டலம் அருகே, தேர்வு பயத்தால் தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு, கல்லூரியின் கழிப்பறையிலேயே மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
கடலூர் செம்மண்டலம் பகுதியில் கந்தசாமி நாயுடு பெண்கள் கல்லூரி அமைந்துள்ளது. பச்சையப்பன் அறக்கட்டளையின் கீழ் இந்த கல்லூரி இயங்கி வரும் நிலையில் இதில் இரண்டு ஷிப்ட்களாக வகுப்புகள் நடைபெறுகின்றன. காலையில் நடைபெறும் வகுப்புகள் அரசு உதவி பெறும் கல்லூரியாகவும் மாலை வகுப்புகள் சுயநிதி கல்லூரியாகவும் இயங்கி வருகின்றது.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் சின்னப்ப சமுத்திரம் பகுதியை சேர்ந்த தனலட்சுமி (19) என்ற மாணவி பிகாம் முதலாமாண்டு இந்த கல்லூரியில் படித்து வருகிறார். இவர் கல்லூரி அருகிலேயே உள்ள ஆதிதிராவிடர் விடுதியில் தங்கி படித்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று காலை வழக்கம்போல் கல்லூரி துவங்கிய உடன் மாணவிகள் கல்லூரிக்கு வந்தனர். அப்போது கழிவறைக்கு சென்ற சில மாணவிகள் அங்கு ஒரு மாணவி தூக்குப்போட்டு தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டு உள்ளனர்.
இதனையடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மாணவிகள் அனைவரும் கல்லூரியை விட்டு வெளியேற்றப்பட்டனர். கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் மற்றும் கல்லூரி முதல்வர் சென்று மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனை தொடர்ந்து கல்லூரியில் உள்ள சிசிடிவிகளை புதுநகர் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அதில் தற்கொலை செய்து கொண்ட மாணவி இன்று காலை 6.50 மணி அளவில் நுழைவாயில் வழியாக உள்ளே வந்து பின்னர் கழிப்பறை இருக்கும் பக்கம் நோக்கி சென்றுள்ளார்.
பின்னர் துப்பட்டாவில் கழிப்பறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். கழிப்பறையில் அவரது புத்தகப்பை இருந்துள்ளது. அதனை சோதனை மேற்கொண்டதில் நான்கு பக்கம் கடிதம் சிக்கியுள்ளது.
அதில் குறிப்பாக அப்பா ,அம்மா ஆகியோரை அதிகமாக நான் நேசிப்பதாகவும் தம்பி, தங்கைகளையும் நேசிப்பதாக எழுதி வைத்துள்ளார். தம்பிகள் நன்றாக படித்து அப்பா, அம்மா அவர்களை பார்த்து கொள்ளும்படி எழுதியிருந்தார். பின்னர் இறுதியில் மாணவி தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ என்ற பயம் காரணமாக தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த கடிதத்தை கைப்பற்றி கடலூர் புதுநகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரி கழிவறையில் மாணவி தூக்குப் போட்டுக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் கல்லூரிக்கு அனுப்பி வைத்த பெண் எப்படி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். என் மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி பெற்றோர்கள் கல்லூரியை முற்றுகையிட்டு போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் பெற்றோர்களை சமாதானப்படுத்தினர். பின்னர் பெற்றோர்கள் தன் மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். புகாரின் பேரிலும் புதுநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also read... மீன் விற்பதில் பிரச்னை - கிராமத்தையே சூரையாடிய 30 பேர் கொண்ட கும்பல்
இந்த நிலையில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவிக்கு அடுத்த ஜூலை மாதம்தான் செமஸ்டர் தேர்வு நடைபெறுகிறது கடந்த 10 நாட்களுக்கு முன்னதாக தான் மாதிரி தேர்வு நடந்து முடிந்துள்ளது தேர்வு இல்லாத நேரத்தில் எப்படி தேர்வு பயத்தால் என் மகள் தற்கொலை செய்து கொண்டிருப்பார் என்பது சந்தேகமாக உள்ளது என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.