முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கணவன் வீட்டில் கழிவறை இல்லை: கடலூரில் காதல் திருமணம் செய்த பெண் ஒரு மாதத்தில் தற்கொலை

கணவன் வீட்டில் கழிவறை இல்லை: கடலூரில் காதல் திருமணம் செய்த பெண் ஒரு மாதத்தில் தற்கொலை

தற்கொலை செய்துகொண்ட பெண்

தற்கொலை செய்துகொண்ட பெண்

கடலூரில் கணவன் வீட்டில் கழிவறை இல்லாததால் திருமணம் நடந்து ஒருமாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கடலூர் அரிசிபெரியாங்குப்பத்தை சேர்ந்தவர் ரம்யா. அவருக்கு வயது 27. எம்.எஸ்சி படித்துள்ள இவர் கடலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவரும் கடலூர் புதுநகரை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். பின்னர் அவர்கள் இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த மாதம் 6-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் கார்த்திகேயன் வீட்டில் கழிவறை வசதி இல்லாததால், ரம்யா தனது தாய் வீட்டுக்கு சென்று வசித்து வந்தார். அப்போது வேறு வீடு பார்த்து அழைத்து செல்வதாக கூறிய கார்த்திகேயன், வேறு வீடு பார்க்கவில்லை என தெரிகிறது. இதுதொடர்பாக சம்பவத்தன்று இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் மனமுடைந்த ரம்யா, வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டுக் கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தாய் மஞ்சுளா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ரம்யாவை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, ரம்யா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மஞ்சுளா, திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் ரம்யாவுக்கு திருமணமாகி ஒரு மாதமே ஆவதால் கழிப்பறை இல்லாத ஒரு காரணத்திற்காக ஒரு பெண் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொள்வாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

அவரது மரணத்துக்கு காரணம் குறித்து கடலூர் கோட்டாட்சியர் அதியமான் கவியரசும் விசாரித்து வருகிறார்.

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.மாநில உதவிமையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

First published:

Tags: Cuddalore