கடலூரில் சானிடைசரில் போலி மதுபானம் தயாரித்து விற்பனை... 6 பேர் கைது...

Youtube Video

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே சானிடைசரில் போலி மதுபானம் தயாரித்து விற்பனை செய்து வந்த கும்பல் சிக்கியுள்ளது. குற்றவாளிகள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 3 பேர் தப்பியோடினர். 

  • Share this:
    ஊரடங்கு அமலில் உள்ள சூழலைப் பயன்படுத்தி, வீட்டிலேயே தொழிற்சாலை அமைத்து போலி மதுபானங்கள் தயாரித்துள்ளனர். சானிடைசர் பயன்படுத்தினால் உயிருக்கு ஆபத்து எனத் தெரிந்தும் போலி மதுபானங்கள் தயாரிக்கப்பட்டதன் பின்னணி என்ன? தப்பியோடிய குற்றவாளிகள் சிக்குவார்களா?

    கடலூர் மாவட்டம் ராமநாதன்குப்பத்தில் வசிப்பவர் 33 வயதுடைய உத்திராபதி. இவர் வீட்டில் போலி மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருவதாக குள்ளஞ்சாவடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், குள்ளஞ்சாவடி காவல் ஆய்வாளர் ஜெய்கீர்த்தி தலைமையிலான போலீசார் ராமநாதன்குப்பம் பகுதியில் உள்ள உத்திராபதி வீட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    இந்த சோதனையின்போது, சானிடைசரை பயன்படுத்தி போலியாக மதுபானம் தயாரித்து வந்தது கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். மருத்துவதுறையில் பயன்படுத்த கூடிய Alcohol Hand Sanitizer கொண்டு மதுபானங்களை தயாரித்து வந்தது, போலீசார் விசாரணையில் தெரியவந்தது. சுகாதார துறை ஆய்வாளர்கள் மூலமாக ஆய்வுகளை மேற்கொண்ட போது இவர்கள் மதுபானம் தயாரிக்க பயன்படுத்தியது Alcohol Hand Sanitizer என்பது உறுதிபடுத்தபட்டது.

    மேலும், டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களைப் போன்றே பாட்டில்கள் மற்றும் ஸ்டிக்கர்களும் அங்கு கண்டுபிடிக்கப்பட்டன. இதையடுத்து உத்திராபதி வீட்டிலிருந்து சுமார் 400 லிட்டர் சானிடைசர், 2,500-க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள், போலி ஸ்டிக்கர்கள், மது தயாரிக்கும் உதிரி பாகங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

    இதுதொடர்பாக உத்திராபதி மற்றும் அங்கு மதுபானம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட வடமலை, ராமலிங்கம், ரகுபதி, தண்டபாணி, மணிகண்டன, ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். ராஜேஷ்குமார், ஸ்ரீதர், அன்பு ஆகியோர் தப்பியோடினர். அவர்களைத் தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    மேலும் படிக்க...  Weather Report | தமிழகத்தில் 8 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு..

    அரசு மதுபான கடை ஊரடங்கு காரணமாக மூடப்பட்டுள்ள நிலையில் பலரும் கள்ளச்சந்தையில் அரசு மதுபான பாட்டில்களை போலியாகத் தயாரித்து அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதனை பலரும் அதிக விலை கொடுத்து வாங்கிக் செல்கின்றனர்.



    தற்போது கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த சானிடைசர் உற்பத்தி அதிகரித்திருப்பதால் அவை எளிதாகக் கிடைக்கின்றன. இதனை பயன்படுத்தி போலி மதுபானங்கள் தயாரிப்பது அதிகரித்து வருகிறது. இதனால், உயிர்பலி ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே யாரும் கள்ளச்சந்தையில் மதுபாட்டில்களை வாங்கி மது அருந்த வேண்டாம் என போலீசார் கேட்டுக்கொண்டனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: