போலி என்கவுன்டர் முயற்சியா? தூத்துக்குடி காவல்துறை மீது துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளானவர் குற்றச்சாட்டு

மாதிரிப் படம்

கோவில்பட்டியில் ஒரு ஜவுளிக் கடை வாசலில் நின்றிருந்த தன்னை பிடித்துச் சென்று கண்ணைக் கட்டி காலில் சுட்டதாக மாணிக்கராஜா ஊடங்களிடம் பேசிய காட்சி ஒன்று வெளியானது.

  • News18
  • Last Updated :
  • Share this:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே, போலீசாரைத் தாக்கி வி்டடு தப்பியோட முயன்ற ரவுடி ஒருவர் சுடப்பட்டார், இந்த வழக்கில், குற்றம் செய்யாத நிலையில் தன்னைக் கண்ணைக் கட்டி போலீசார் சுட்டதாக பாதிக்கப்பட்டவர் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரியும் இசக்கிராஜா தனது அதிரடி நடவடிக்கைகளால் மக்களின் கவனத்தை ஈர்த்தவர். 2018-ம் ஆண்டு இறுதியில் ரவுடிகளிடம் அவர் பேசிய ஆடியோ வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து நெல்லை மாவட்டம் சுத்தமல்லியில் ஓட்டல் உரிமையாளரைத் தாக்கியதாக சர்ச்சையில் சிக்கினார். தொடர்ந்து கோவில்பட்டியில், ஒரு குடும்பத்தின் விவாகரத்து விவகாரத்தில் தலையிட்டார் என்றும் சர்ச்சையில் சிக்கினார். தற்போது குற்றத்தில் ஈடுபடாத ரவுடியை துப்பாக்கியால் சுட்டதாக சர்ச்சையி்ல சிக்கியுள்ளார் இசக்கிராஜா.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகேயுள்ள காப்புலிங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கராஜா. இவர் தனது தோட்டத்தில் ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கிகள் பதுக்கி வைத்திருந்ததாக போலீசாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து கோவில்பட்டி துணை காவல் கோட்டத்திற்கு உட்பட்ட சிறப்பு தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் இசக்கிராஜா தலைமையில் காவலர்கள் 5 பேர் கொண்ட குழுவினர், நாலாட்டின்புதுாரை அடுத்த கார்த்திகைப்பட்டடியில் உள்ள மாணிக்கராஜாவுக்கு சொந்தமான தோட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது போலீசாரை ஆயுதங்களால் தாக்கியதாக கூறப்படுகிறது. அதனையடுத்து, உதவி ஆய்வாளர் இசக்கிராஜா, மாணிக்கராஜாவின் வலது முட்டிக்கு கீழே துப்பாக்கியால் சுட்டார். மாணிக்கராஜா பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காயமடைந்த போலீசார் செல்வகுமார் மற்றும் முகமது மைதீன் ஆகியோர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதற்கிடையில், கோவில்பட்டியில் ஒரு ஜவுளிக் கடை வாசலில் நின்றிருந்த தன்னை பிடித்துச் சென்று கண்ணைக் கட்டி காலில் சுட்டதாக மாணிக்கராஜா ஊடங்களிடம் பேசிய காட்சி ஒன்று வெளியானது. இந்த சர்ச்சையில் தான் சிக்கியுள்ளார் உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா.  மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது, ஊடகங்களுக்கு மாணிக்க ராஜா அளித்த பேட்டியில், குற்றம் செய்யாத நிலையில் தான் சுடப்பட்டதாகவும் போலீசார் வேண்டும் என்றே தன் மீது வழக்குகள் போடுவதாகவும் குமுறினார்.

Also see:

Published by:Karthick S
First published: