இரும்புத்திரை திரைப்பட பாணியில் கோடிக்கணக்கில் மோசடி.. அதிர்ச்சியில் மக்கள்.. கொள்ளை நடந்தது எப்படி?

இரும்புத்திரை திரைப்பட பாணியில் கோடிக்கணக்கில் மோசடி.. அதிர்ச்சியில் மக்கள்.. கொள்ளை நடந்தது எப்படி?

நூதனமுறையில் பணம் கொள்ளை

இரும்புத் திரை திரைப்படத்தில் வருவது போல் 3 தேசிய வங்கிகளின் வாடிக்கையாளர்கள் கணக்கில் இருந்து 5 கோடி ரூபாய் வரை நுாதன முறையில் திருடப்பட்டுள்ளதாக பகீர் புகார் எழுந்துள்ளது.

 • Share this:
  இரும்புத் திரை படத்தில், கதாநாயகன் விஷால் ஒரு வங்கியில் கடன் வாங்குவார். அவரது வங்கிக் கணக்கிற்கு பணம் வந்த சில நொடிகளில் நுாதன முறையில் திருடப்பட்டு விடும். இது படத்தில் மட்டுமல்ல... நிஜத்திலும் நடந்திருக்கிறது.

  பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி ஆகிய 3 தேசிய வங்கிகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் பலர் கடும் கொந்தளிப்பில் இருக்கின்றனர். தங்கள் வங்கிக் கணக்கில் இருந்து ஆயிரம் ரூபாய் முதல் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை நுாதன முறையில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தஞ்சை மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்துள்ளனர்.

  கோடிக்கணக்கில் கொள்ளை நடந்தது எப்படி?

  தஞ்சை நகரின் பழைய பேருந்து நிலையத்தில் பாரத ஸ்டேட் வங்கி செயல்படுகிறது. ஒட்டுமொத்த தஞ்சை மாவட்டத்தின் தலைமை அலுவலகம் அதுதான், தஞ்சை ஈஸ்வரி நகரில் இந்தியன் வங்கியும், பட்டுக்கோட்டையில் கனரா வங்கியும் செயல்பட்டு வருகின்றன.

  இந்த வங்கிகளில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களிடம் இருந்து, இரண்டே இரண்டு ஏடிஎம் மையங்கள் மூலம் நுாதன முறையில் ஓடிபி இன்றி, கோடிக்கணக்கில் பணம் கொள்ளைடிக்கப்பட்டுள்ளது.

  திருச்சி காட்டூர், திருச்சி என்ஆர்ஐ பகுதி ஆகிய இரண்டு இடங்களில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையங்கள் மூலம்தான் இந்த கொள்ளை அரங்கேறியுள்ளது.

  அத்தனை கொள்ளையும் இரவு 7 மணிக்கு மேல்தான் நடந்துள்ளன என்கின்றனர் வாடிக்கையாளர்கள். பாரத ஸ்டேட் வங்கி கணக்கில் இருந்து இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை ஏடிஎம் மூலம் பணம் எடுத்தால் ஓடிபி வரும்; ஆனால் இந்தக் கொள்ளையில் அப்படி ஓடிபியும் வரவில்லை.

  வாடிக்கையாளர்கள் தங்கள் பணம் கொள்ளை போவதை அறிந்து கணக்கை பிளாக் செய்த பிறகும் அதில் இருந்து பணம் எடுக்க மர்ம நபர்கள் முயன்றுள்ளனர்.

  கொள்ளையடிக்கப்பட்ட பணம் எவ்வளவு, எந்தெந்த நேரத்தில் எடுக்கப்பட்டுள்ளது என்பது போன்ற விவரங்கள், வாடிக்கையாளர்களின் மினிஸ்டேட்மென்ட்டில் பதிவாகியுள்ளன. தங்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் அந்தந்த வங்கி நிர்வாகங்களிடம் முறையிட்டும் பலனில்லை.

  தாங்கள் மட்டுமின்றி மேலும் பலர் இந்த ரீதியில் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்கின்றனர் வாடிக்கையாளர்கள். ஆனால் வங்கி நிர்வாகங்களோ காவல்துறையிடம் புகார் அளியுங்கள் என்று கையை விரித்து விடுவதாக வாடிக்கையாளர்கள் கதறுகின்றனர்.

  அனைத்து பாதுகாப்பு விதிகளையும் மீறி வங்கிக் கணக்குகளில் இருந்து கோடிக்கணக்கான பணம் கொள்ளையடிக்கப்பட்டது பற்றி தீவிர விசாரைண நடத்த வேண்டும் எனக் கோரி, பாதிக்கப்பட்டவர்கள் வியாழக்கிழமை அன்று தஞ்சை மாவட்ட எஸ்பி, தேஷ்முக் சேகர் சஞ்சயிடம் புகார் அளித்துள்ளனர்.

  அவர், மாவட்ட சைபர் கிரைம் போலீசாருக்கு இதுகுறித்து விசாரிக்கும்படி உத்தரவிட்டுள்ளார். நடந்த கொள்ளை குறித்து நமது செய்தியாளர் சம்பந்தப்பட்ட வங்கிகளின் மேலாளர்களை அணுகிய போது அவர்கள் முறையான பதிலளிக்கவில்லை. மேலும் மேலும் கேட்டபோது அலட்சியமான பதில்களே கிடைத்தன.

  மேலும் படிக்க...இனிமேல் எங்களிடமும் அனுமதி வாங்க வேண்டும்”... ஓடிடி வெப் சீரிஸ், திரைப்பட குழுக்களை வலியுறுத்தும் பாதுகாப்பு அமைச்சகம்

  வங்கிப் பணம் கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கப்பட்ட இந்த சம்பவத்தில் 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த வழக்கில் தீவிர விசாரணை நடத்தப்படுமா? கொள்ளையடிக்கப்பட்ட பணம் மீட்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு தரப்படுமா? குற்றவாளிகள் சிக்குவார்களா?
  Published by:Vaijayanthi S
  First published: