மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு உடனடியாக இழுப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், மக்களின் வாழ்வாதாரத்தின் முக்கிய அம்சமாகவும் விளங்குவது விவசாயத் துறை. இப்படிப்பட்ட இன்றியமையாத் துறையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு, தமிழ்நாட்டின் உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்கின்ற வகையில் உணவு தானியங்கள் மற்றும் பிற விவசாய விளை பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்கும் பணியினை மேற்கொண்டு வரும் விவசாயிகளின் வருமானம் கேள்விக்குறியாக உள்ளது மிகுந்த மன வேதனையை அளிக்கிறது.
2021 ஆம் ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பெய்த மழையினால் அறுவடைக்கு தயாராயிருந்த குறுவை பயிர்கள் முழுமையாக சேதமடைந்த இனங்களில் விவசாயிகளுக்கு இழப்பீடாக ஹெக்டேருக்கு 20,000 ரூபாய் வழங்கப்படும். என்றும், நடப்பு சம்பா பருவத்தில் நடவு செய்து நீரில் மூழ்கி சேதமடைந்த பயிர்களை மறு சாகுபடி செய்திட ஏதுவாக ஹெக்டேர் ஒன்றுக்கு 6,038 ரூபாய்க்கான இடுபொருட்கள் வழங்கப்படும் என்றும் 16-11-2021 நாளைய அரசு செய்திக் குறிப்பின் மூலம் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சம்பா பருவத்தில் பாதிப்படைந்த இளம் பயிர்களுக்கு 6,038 ரூபாய்க்கான இடுபொருட்கள் வழங்குவதற்குப் பதிலாக நிதியாக வழங்கப்படும் என்று 20-01-2022 நாளிட்ட செய்திக் குறிப்பு வாயிலாக தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க - Exclusive : தஞ்சை மாணவியின் தற்கொலைக்கான காரணம் என்ன? - உண்மை அறியும் குழு விளக்கம்
மேற்படி இழப்பீடு ' என்பது 15-11-2021 வரை பெய்த மழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கானது என்றும், அதுவும் "அண்மையில் தான் வழங்கப்பட்டது என்றும், இதற்குப் பிறகு, 2021 ஆம் ஆண்டு டிசம்பர், 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதங்களில் பெய்த கனமழையின் விளைவாக ஏற்பட்ட பயிர்ச் சேதத்திற்கு இன்னமும் இழப்பீடு வழங்கப்படவில்லை என்றும், டிசம்பர் மாதத்திற்கான பயிர்ச் சேதம் குறித்து அரசுக்கு தகவல் அனுப்பப்பட்டும் இழப்பீட்டிற்கான உத்தரவை இன்னும் அரசு அளிக்கவில்லை என்றும், சம்பா மற்றும் தாளடி பருவத்தைப் பொறுத்த வரையில், பருவத்தின் ஆரம்பகட்ட நிலையில் கணக்கெடுக்கப்பட்டதால் குறைந்த அளவு விவசாயிகளே பயனடைந்தனர் என்றும், அதற்குப்பின் பெய்த மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கான இடழிப்பீடும் வழங்கப்படவில்லை என்றும் விவசாயிகள் கவலையோடு தெரிவிக்கின்றனர். விவசாயிகளுக்காக குரல் கொடுக்கும் பொதுவுடைமைக் கட்சிகள் இந்த விஷயத்தில் மவுனம் சாதிப்பது வியப்பாக இருக்கிறது.
இதுமட்டுமல்லாமல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களில் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி பத்து லட்சம் ஏக்கரில் நடவு செய்யப்பட்டு இருந்ததாகவும், தற்போது அறுவடை தீவிரமாக இருக்கின்ற நேரத்தில், எதிர்பாராத மழை காரணமாக 1.5 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் சாய்ந்து விட்டதாகவும், ஊடுபயிராக சாகுபடி செய்த பிற பயிர்களும் நீரில் மூழ்கி அழுகிவிட்டதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இது ஒருபுறம் என்றால், மறுபுறம் அறுவடை செய்த நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வதில் காலதாமதம் ஏற்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். அறுவடை செய்த நெல்லை நேரடி கொள்முதல் நிலையங்களில் கொட்டி வைத்துள்ளதாகவும், திடீர் மழை காரணமாக அரசு கொள்முதல் நிலையங்களில் கொட்டி வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான நெல்மூட்டைகள் மழையில் நனைந்துவிட்டதாகவும், இதற்குக் காரணம் தினமும் குறைந்த அளவிலேயே நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுவதும், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை சேமிப்புக் கிடங்குகளுக்கு எடுத்துச் செல்வதில் தாமதம் ஏற்படுவதும்தான் என்றும், இதன் விளைவாக ஈரப்பதம் அதிகரித்துவிட்டதாகவம், இன்றைய நிலவரப்படி 80,000-க்கும் அதிகமான நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ளதாகவும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: தேர்தல் நேரத்தில் முதல்வர் திட்டங்களை மட்டுமே அறிவிக்கிறார்: செயல்படுத்துவதில்லை - சீமான் குற்றச்சாட்டு
பிப்ரவரி மாதம் வரை சேதமடைந்த பயிர்களுக்கான இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்பதும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் அதிக அளவு நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட வேண்டும் என்பதும் விவசாயிகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. எனவே, முதலமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, மழையினால் சேதமடைந்த அனைத்துப் பயிர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்கவும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 1,500 நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யவும், நெல் மூட்டைகள் மழையில் நனையாமல் இருக்கும் வகையில் அவற்றை உடனடியாக சேமிப்புக் கிடங்குகளுக்கு அனுப்பவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.