சொத்துக்காக மகனே பெற்றோரை வெட்டி ஏரி அருகே வீசிய சம்பவம்

பெற்றோர் சபாபதி - சரசு

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் பகுதியில் சொத்துக்காக பெற்ற தாய் - தந்தையை மகனே அடித்து துன்புருத்தி அரிவாளால் வெட்டி ஏரி அருகே வீசிச்சென்ற சம்பவம் நடந்துள்ளது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  நாமக்கல் அருகே சொத்துத் தகராறில் பெற்ற தாய்-தந்தையை மகனே கூலிப்படை வைத்து வெட்டி ஏரி அருகே வீசிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களால் காப்பாற்றப்பட்ட வயதான தம்பதியினர், பாதுகாப்பு கோரி காவல்துறையை நாடியுள்ளனர். இதனையடுத்து பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பழனிவேல் உட்பட கூலிப்படையை சேர்ந்தவர்கள் மீது 7 பிரிகளின் கீழ் வழக்கு பதிந்து காவல்துறை குற்றவாளிகளை தேடி வருகிறது.

  நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் மோர்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் சபாபதி - சரசு தம்பதி. இவர்களுக்கு பழனிவேல் என்ற மகனும் சுமதி என்ற மகளும் உள்ளனர். இருவரும் திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். சபாபதி தன்னிடம் இருந்த 27 ஏக்கர் நிலத்தில் மகனுக்கு 20 ஏக்கர் நிலத்தையும் மகளுக்கு 7 ஏக்கர் நிலத்தையும் எழுதிக் கொடுத்துள்ளனர். அந்த 7 ஏக்கரையும் தனக்கே தரவேண்டும் என, பழனிவேல் பெற்றோருக்கு நிர்ப்பந்தம் கொடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் அவர்களுக்கு சொந்தமான வீட்டில் இருந்தும் விரட்டியுள்ளார்.

  அதன்பின் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் வெளியான தீர்ப்பின்படி சபாபதி தம்பதி, தங்கள் வீட்டை மீட்டு அதில் வசித்து வருகின்றனர். கடந்த 25-ம் தேதி தன் பெற்றோரை காரில் கூலிப்படை கும்பல் உதவியுடன் கடத்திச் சென்ற பழனிவேல், அவர்களை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளான். பின்னர் கோனேரிப்பட்டி ஏரி அருகே சபாபதி மற்றும் அவரது மனைவி சரசுவை அந்த கும்பல் வீசிச் சென்றுள்ளது.

  இந்நிலையில் ஏரிப்பக்கம் வந்த பொதுமக்கள் முதிய தம்பதியை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுதொடர்பான புகாரையடுத்து, பழனிவேல் மற்றும் கூலிப்படையினர் மீது தாக்குதல், திருட்டு உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த மல்ல சமுத்திரம் போலீசார்,  அவர்களை தேடிவருகின்றனர்.

  20 ஏக்கர் நிலத்தை எழுதிவைத்த பிறகும், பெற்று வளர்த்த தாய், தந்தை என்றும் பாராமல் மகனே காரில் கடத்திச் சென்று அடித்து துன்புறுத்தி சாலையோரம் வீசிச் சென்றதாகக் கூறப்படும் சம்பவம் இராசிபுரம் பகுதியில் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

  Also see....

  Published by:Vaijayanthi S
  First published: