ஆன்லைன் சூதாட்ட செயலிகளில் நூதன மோசடி... கோடிகணக்கில் ஏமாற்றிய கும்பல்

கொரோனா காலத்தில் வீட்டில் இருந்துகொண்டே ஆன்லைன் சூதாட்டங்களில் முதலீடு செய்து சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் பணத்தை ஏமாந்து உள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

  • Share this:
லக்கி ஸ்டார் மற்றும் ஜெனிசிஸ் என்ற இரண்டு ஆன்லைன் செயலிகள் மூலம் ஆயிரக்கணக்கான பேரை மோசடி செய்த கும்பல் குறித்து  பாதிக்கப்பட்டவர்கள் சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரில் அங்கீகரிக்கப்படாத இணையதளம் மூலம் லக்கி ஸ்டார் என்ற செயலியை முதலில் பதிவிறக்கம் செய்ததாகவும், அதில் குறைந்தபட்சம் பத்தாயிரம் ரூபாய் முதலீடு செய்யலாம் எனவும் அதன் மூலம் தினமும் சம்பாதிக்கலாம் என்ற அடிப்படையில் பணத்தை முதலீடு செய்ததாக தெரிவித்துள்ளனர்.

இந்த முதலீடு செய்த பணத்தை அந்த செயலியை நடத்தும் கும்பல் ஆன்லைன் லாட்டரிகள் ஆன்லைன் கேம்கள் என பல்வேறு விதமான விஷயங்களில் முதலீடு செய்து சூதாட்டம் நடத்துகின்றனர்.
ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதல் 3000 வரை லாபம் கிடைப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த முதலீடு மூலம் கிடைக்கும் லாபம் உள்ளிட்டவற்றை ஜெனிசிஸ் என்ற செயலி மூலம் கண்காணிக்கும்படி வடிவமைத்துள்ளார்கள்  என கூறியுள்ளனர்.

இதன் மூலம் கிடைக்கும் லாபத்தில் 40% அந்த செயலியை நடத்தும் கும்பல் எடுத்துக் கொள்வதாகவும், மீதமுள்ள பணத்தை தங்களது வாலட்டில் சேர்த்து விடுவார்கள் என தெரிவித்துள்ளனர். வாலட்டில் இருக்கும் பணத்தை திங்கள் முதல் வெள்ளி வரை எடுத்துக் கொள்ளலாம் எனவும், சனி ஞாயிறுகளில் இந்த வாலட்டில் இருந்து பணத்தை எடுக்க முடியாது என தெரிவித்துள்ளனர்.

Also Read : தவறாக நடக்க முயன்றவரை அடித்துக் கொன்ற பெண்... தற்காப்பு என்று விடுதலை செய்த திருவள்ளூர் எஸ்.பி
 முதலீடு செய்த பணத்தில் டிராகன் முதலீடு என்று தெரிவித்து முதலீடு செய்த அனைத்துப் பணத்தையும் செயலியை நடத்தும் கும்பல் எடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளனர். எவ்வளவு பணம் செயலியை சேர்ந்தவர்கள் எடுத்து உள்ளார்களோ, அதே அளவு பணத்தை மீண்டும் முதலீடு செய்தால் மட்டுமே மொத்த பணமும் திரும்பக் கிடைக்கும் என செயலியின் நிபந்தனை என்பதால், மொத்த பணத்தை மீட்க வேண்டும் என்பதற்காக, மீண்டும் பணத்தை முதலீடு செய்து தாங்கள் இழந்த பணத்தை மீட்க முதலீடு செய்து வந்ததாக தெரிவித்துள்ளனர்.


இதுப்போன்று ஒரு மாத காலம் தாங்கள் போட்ட பணத்திற்கு ஒரு கணிசமான தொகையை சம்பாதிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த செயலிகள் மூலம் பணம் கிடைக்க ஆரம்பித்த உடன், அடுத்து தங்கள் உறவினர்கள், நண்பர்கள் என அனைவரையும் இந்த செயலியில் இணைய வைத்தோம். அவ்வாறு இணைந்தவர்கள் மூலமாக சம்பாதிக்கும் பணத்திலும், தங்களுக்கு பங்கு கிடைக்கும் என்பதால் எம்எல்எம். என்ற முறையில் பலரையும் இணைத்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்தச் செயலியை நடத்துபவர்கள் வாட்ஸ் அப் குழு அமைத்து கொண்டு தங்களுக்கு பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டு வந்தனர். அந்த அடிப்படையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டிராகன் முறையில் செயலியில் முதலீடு செய்யப்பட்ட பணம் அனைத்தையும் செயலியை நடத்துபவர்கள் எடுத்துக் கொண்டதாகவும், வழக்கமாக நடப்பது போல்,  எவ்வளவு பணத்தை செயலியை நடத்துபவர்கள் எடுத்துக் கொண்டார்களோ அதே அளவு முதலீடு செய்தும், எந்த பணமும் திருப்பி கிடைக்கவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

Also Read : நண்பர்களால் கடற்கரையில் புதைக்கப்பட்ட இளைஞர்... 10 மாதங்களுக்கு பின் கொலை அம்பலம்
 தொடர்ந்து பணம் கிடைக்காமல் போன பிறகுதான் தாங்கள் ஏமாந்தது தெரியவந்துள்ளது. இவ்வாறாக 300க்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் குழுக்களை அமைத்து,செயலிகளில் முதலீடு செய்ய வைத்து தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கில் மோசடி செய்திருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர்.


கொரோனா காலத்தில் வீட்டில் இருந்துகொண்டே ஆன்லைன் சூதாட்டங்களில் முதலீடு செய்து சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் பணத்தை ஏமாந்து உள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்தச் செயலிகள் மூலம் குறைந்தபட்சம் 10,000 முதல் அதிகபட்சம் ஒரு கோடி ரூபாய் வரை இழந்ததாக தெரியவந்துள்ளது.

குடும்பம் குடும்பமாக பலரும் லட்சக்கணக்கான ரூபாய் இழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். தற்போது இந்த கும்பல் சாப்ட்வேர் பிரச்சனை வந்து விட்டதாக கூறிய அனைத்து பணத்தையும் திருடிக்கொண்டு சென்று விட்டதாக தெரிவித்துள்ளனர். ஆனால் தற்போது மற்றொரு செயலி மூலம் கல்லூரி மாணவர்களையும், பள்ளி மாணவர்களையும் குறி வைத்து மோசடி செய்ய ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vijay R
First published: