அரசு நிலத்தை அரசுக்கே விற்பனை... ரூ.200 கோடி மோசடி செய்தவர்கள் சிக்கியது எப்படி?

Youtube Video

அரசு நிலத்திற்கு பட்டாபோட்டு அரசுக்கே விற்பனை செய்தது அம்பலமாகியுள்ளது. நெடுஞ்சாலை விரிவாக்கம் திட்டத்தில் நில எடுப்பு தொகையாக வழங்கப்பட்ட 200 கோடி ரூபாயில் முறைகேடு செய்தது தெரியவந்துள்ளது.

 • Share this:
  சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை 6 வழிப்பாதையாக விரிவாக்கம் செய்யும் திட்டத்தின் கீழ், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் சார்பில் இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டு வந்தது. இதற்கென மாவட்ட சிறப்பு வருவாய் அலுவலர் தலைமையில் அலுவலகம் ஒன்று இயங்கி வருகிறது.

  இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் தாலுக்கா பீமன்தாங்கல் என்னும் கிராமத்தில், தேசிய நெடுஞ்சாலையோரம் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் மோசடி நடந்துள்ளதாக புகார்கள் எழுந்தன. அரசு நிலங்களுக்கு போலிப் பட்டா தயாரித்து இழப்பீட்டு தொகையாக சுமார் 200 கோடி ரூபாய் வரை முறைகேடாக பெற்றிருப்பதாக அதிர்ச்சி தகவல் கடந்த ஆண்டு வெளியானது.

  Also Read : போலீஸ் மீது சாக்காடை நீரை எடுத்து வீசிய சம்பவம்... போதை ஆசாமி வழக்கில் வாண்டேடாக சிக்கியது எப்படி?

  இதுகுறித்து தமிழக நில நிர்வாக ஆணையம் விசாரணை நடத்தியதில் 70க்கும் மேற்பட்டோர் இந்த முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. முறையாக ஆவணங்களை சரி பார்க்காமல் போலி பட்டா வைத்திருந்தவர்களுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலமாக இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

  இது தொடர்பாக தற்போதைய ஶ்ரீபெரும்புதூர் தாசில்தார் வெங்கடேசன், காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பியிடம் புகார் கொடுத்தார். அதனடிப்படையில் அரசு நிலத்தை போலி பட்டா மாற்றம் செய்த சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் நர்மதா, அப்போதைய ஶ்ரீபெரும்புதூர் தாசில்தார் ராதாகிருஷ்ணன், நிலவரி திட்ட உதவி அலுவலர் சண்முகம் உள்ளிட்ட 8 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

  Also Read : உஷார்! பழைய நாணயங்கள், ரூபாய் நோட்டுகளுக்கு லட்சங்களில் பணம் கிடைப்பது சாத்தியமா?

  மேலும், முதல்கட்ட விசாரணையில் போலி பட்டா மூலம 30 கோடி ரூபாய் ஏமாற்றி பெற்ற ஆசிஸ் மேத்ரா மற்றும் 3 கோடி ரூபாய் பெற்ற செல்வம் ஆகிய இருவரை காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் புதன்கிழமை கைது செய்தனர். இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலைக்கு நிலம் எடுக்கப்பட்ட கிராமங்களில், போலி பட்டா குறித்து விசாரிக்க, வருவாய் துறை சார்பில் உத்தரவிட்டுள்ளது.

  ஸ்ரீபெரும்புதூரில் தொடங்கி தாமல் வரை 33 கிராமங்களில் வேறு யாராவது போலி பட்டா வைத்து இழப்பீடு தொகை பெற்றனரா என வருவாயத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இதற்காக 6 வருவாய் துறை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் தற்போது வரை 83 நபர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. விசாரணை முடிவில் மேலும் பலர் சிக்குவார்கள் எனத் தெரிகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: