ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பள்ளியில் படித்தபோது, பேஸ்புக் மூலம் பாலியல் தொல்லை - 9 ஆண்டுகள் பிறகு கல்லூரி மாணவி அளித்த புகாரால் மத போதகர் கைது

பள்ளியில் படித்தபோது, பேஸ்புக் மூலம் பாலியல் தொல்லை - 9 ஆண்டுகள் பிறகு கல்லூரி மாணவி அளித்த புகாரால் மத போதகர் கைது

பள்ளியில் படித்தபோது, பேஸ்புக் மூலம் பாலியல் தொல்லை - 9 ஆண்டுகள் பிறகு கல்லூரி மாணவி அளித்த புகாரால் மத போதகர் கைது

வேலூர் மாணவி அளித்த புகாரை பார்த்த கோவையைச் சேர்ந்த 19 வயதான கல்லூரி மாணவி ஒருவர் மகளிர் காவல் நிலையத்தில் போதகர் சாமுவேல் ஜெய்சுந்தர் மீது புகார் அளித்தார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

பள்ளிக் குழந்தைகளிடம் மதம் தொடர்பான வகுப்புகள் எடுக்க வேண்டிய போதகர் சாமுவேல் ஜெய்சுந்தர் மற்றும் ரூபன் கிளமென்ட் என்ற இருவரும், அவர்களுடன் ஆபாசமாக உரையாடிய விவகாரம் வேலூர் மாணவி மூலம் வெளிச்சத்திற்கு வந்தது. 2 மாதங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தில் அந்த பெண் புகார் அளித்த நிலையில், 9 ஆண்டுகளுக்கு முன்னர் சாமுவேல் ஜெய்சுந்தர் அத்துமீறியதாக கோவை மாணவி அளித்த புகாரில் கைதாகியுள்ளார்.

பல ஆண்டுகளாக மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டவர் சிக்கியது எப்படி?

சென்னை அயனாவரத்தில் ஸ்கிரிப்ச்சர் யூனியன் அண்டு சில்ரன் ஸ்பெஷல் சர்வீஸ் மிஷன் கவுன்சில் ஆப் இந்தியா என்ற கிறிஸ்தவ மத போதக அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பில், கீழ்ப்பாக்கத்தில் வசித்து வரும் சாமுவேல் ஜெய்சுந்தர், ரூபன் கிளமென்ட், ஆல்பர்ட் மற்றும் ஜேனட் எபனேசர் ஆகியோர் மதபோதகர்களாகப் பணியாற்றி வருகின்றனர்.

மிஷனின் ஆங்கில மொழிப் பிரிவு செயலாளராகப் பணியாற்றி வந்த சாமுவேல் ஜெய்சுந்தர், வேலுாரில் பணியாற்றி வந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம், வேலுாரில் அவரிடம் படித்து வந்த 19 வயது இளம்பெண், சாமுவேல் குறித்து தலைமையகத்திற்குப் புகாரளித்தார். அதில், தனது முகநுால் மெசஞ்சரில் சாமுவேல் ஜெய்சுந்தர் ஆபாசமாக உரையாடியதாகக் குறிப்பிட்டிருந்தார்.

மிஷன் நிர்வாகிகள் நடத்திய விசாரணையில், சாமுவேல் ஜெய்சுந்தர், ரூபன் கிளமென்ட், ஆல்பர்ட் மற்றும் ஜேனட் எபனேசர் ஆகியோர் இதேபோல் பள்ளிச் சிறுமியரிடம் ஆபாசமாக உரையாடியது தெரியவந்தது. 2 மாதங்கள் கடந்த நிலையில், இந்த சம்பவங்கள் சமூக வலைதளங்களில் வெளியானதால், ஸ்க்ரிப்ச்சர் மிஷன், உடனடியாக சாமுவேல் ஜெய்சுந்தரை பணியிடை நீக்கம் செய்வதாக அறிக்கை வெளியிட்டது.

மேலும், ரூபன் கிளமென்ட், ஆல்பர்ட் மற்றும் ஜேனட் எபனேசர் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தது. இதுதொடர்பாக, சென்னை காவல் ஆணையருக்கு ஆன்லைனில் ஒருபுகாரையும் அந்த மிஷன் அனுப்பியது.

புகாரின் அடிப்படையில், விசாரணை நடத்தும் படி அயனாவரம் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. அயனாவரம் போலீசார் விசாரணை நடத்தி மதபோதகர்கள் சாமுவேல் ஜெய்சுந்தர், ரூபன் கிளமென்ட் ஆகியோர் மீது பாலியல் தொல்லை கொடுத்தல், தகவல் தொழில்நுட்ப சட்டத்தை தவறாகப் பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாக இருக்கும் சாமுவேல் ஜெய்சுந்தர் மற்றும் ரூபன் கிளமென்ட் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில், வேலூர் மாணவி அளித்த புகாரை பார்த்த கோவை போத்தனூரைச் சேர்ந்த 19 வயதான கல்லூரி மாணவி ஒருவர் கோவை இராமநாதபுரத்திலுள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சாமுவேல் ஜெய்சுந்தர் மீது ஒரு புகார் அளித்தார். அதில் அம்மாணவி 2011 ஆம் ஆண்டில் 6 ஆம் வகுப்பு படித்த போது, பள்ளிக்கு தன்னம்பிக்கை பயிற்சி அளிக்க வந்த சாமுவேல் ஜெய்சுந்தர் அறிமுகம் ஆகியுள்ளார்.

பின்னர் 2011 முதல் 2015 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் அம்மாணவியுடன் முகநூல் மூலம் சாமுவேல் பேசி வந்துள்ளார். அப்போது மாணவியிடம் ஆபாச சாட்டில் ஈடுபட்டுள்ளார். இதை அடுத்து அந்த மாணவி சாமுவேல் ஐடியை பிளாக் செய்துவிட்டு அவருடன் பேசுவதை தவிர்த்துள்ளார்.

இது குறித்து யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் பாலியல் தொல்லை கொடுத்தாக சாமுவேல் மீது வேலூர் மாணவி புகார் அளித்திருப்பது அந்த மாணவிக்கு தெரியவந்தது. இதையடுத்து தன்னிடமும் ஆபாசமாக சாட் செய்து மன உளைச்சலை ஏற்படுத்தியதாக அம்மாணவி புகார் அளித்தார்.

சாமுவேல் ஜெய்சுந்தரை ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மாணவியிடம் 9 ஆண்டுகளுக்கு முன்னர் ஆபாசமாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரில் சாமுவேல் ஜெய்சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். இதே போல் வேறு மாணவிகளிடம் அத்துமீறியுள்ளாரா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்

Published by:Yuvaraj V
First published:

Tags: Coimbatore, Crime | குற்றச் செய்திகள், Vellore