ஃபேஸ்புக்கில் வலைவிரித்து சுருட்டும் காதல் ஜோடி... உஷார்

Youtube Video

விலை உயர்ந்த செல்போன்களின் படங்களையும் முகநுாலில் பதிவிட்டு மோசடி வலை விரித்துள்ளனர்.

  • Share this:
சென்னையில் ஃபேஸ்புக் மூலம் விலை உயர்ந்த செல்போன்களை பாதி விலைக்கு விற்பதாகக் கூறி 50க்கும் மேற்பட்ட நபர்களை ஏமாற்றிய இளம் காதல் ஜோடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஃபேஸ்புக்கில் புதிய விலை உயர்ந்த செல்போன்களை பாதி விலைக்கு தருவதாக கூறி ஆயிரக்கணக்கில் பணம் பறிக்கப்பட்டதாக சிலர், அடையாறு சைபர் கிரைம் போலீசாரில் புகார் அளித்தனர். புகார்கள் தொடர்ந்து வரவே, வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணையைத் தொடங்கினர். குற்றவாளிகள் பயன்படுத்திய முகநூல் கணக்கு மற்றும் கூகுள் பே எண் மற்றும் செல்போன் எண்களை வைத்து பார்த்தபோது, சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கு எண், பம்மலைச் சேர்ந்த பகுதியைச் சேர்ந்த 21 வயதேயான நளினி என்ற பெண்ணுடையது என்பது தெரியவந்தது

நளினியைப் பிடித்து விசாரித்ததி்ல், அவரது காதலர் குரோம்பேட்டையை அடுத்த நெமிலிச்சேரியைச் சேர்ந்த 23 அரவிந்த் சிக்கினார். விசாரணையில் அரவிந்த், கேட்டரிங்கில் டிப்ளமா முடித்துவிட்டு அதிக பணம் சம்பாதிப்பதற்காக முகநூல் மூலம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. கஸ்டம்ஸில் தனக்கு தெரிந்த நபர்கள் பணிபுரிவதாகவும் அவர்களின் மூலம் வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் விலை உயர்ந்த செல்போன்களை பாதி விலைக்கு விற்பவதாகவும் முகநூலில் இந்தக் காதல் ஜோடி விளம்பரம் செய்துள்ளது.

விலை உயர்ந்த செல்போன்களின் படங்களையும் முகநுாலில் பதிவிட்டு மோசடி வலை விரித்துள்ளனர். வாடிக்கையாளர் அணுகும்போது, பணத்தை தாங்கள் சொல்லும் கூகுள் பே, போன் பே கணக்குகளில் அனுப்பும்படி கூறியுள்ளனர். அந்த கூகுள் பே மற்றும் போன் பே கணக்குகள், நளினியின் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டவை. மோசடிக்காக செல்போன் எண்களை மாற்றி மாற்றி இருவரும் பயன்படுத்தி வந்துள்ளனர்.

2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம், இதேபோல, ஃபேஸ்புக் மோசடியில் ஈடுபட்டு கொடுங்கையூர் காவல் துறையினரால் அரவிந்த் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றவர் என்பதும் அப்போது அரவிந்தனை ஜாமினில் எடுத்தவர் அவரது காதலியான நளினி என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. 2018-ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை இருவரும் இணைந்து 50க்கும் மேற்பட்ட நபர்களிடமிருந்து ரூபாய் 10 லட்சத்திற்கும் மேல் மோசடி செய்துள்ளனர்.

மோசடி பணத்தில் வெளியூர் பயணங்கள், புது செல்போன்கள், புது ஆடைகள் மற்றும் புது இருசக்கர வாகனங்கள் வாங்குவது என சொகுசு வாழ்க்கையை மேற்கொண்டு வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட காதல் ஜோடியிடம் இருந்து ஏடிஎம் கார்டுகள், மோசடி செய்ய பயன்படுத்தப்பட்ட பல சிம் கார்டுகள், செல்போன்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Published by:Vijay R
First published: