அறிவியல் டீச்சருடன் கள்ளக்காதல்... கணக்கு வாத்தியாரை ஆள் வைத்து கொன்ற கணவன்

Youtube Video

திருப்பத்தூர் மாவட்டத்தில் கணித ஆசிரியர் கொலைவழக்கில் திடீர்திருப்பமாக கள்ளகாதல் விவகாரம் தான் கொலைக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.

 • Share this:
  கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் 36 வயதான சிவகுமார்; பத்தாண்டுகளுக்கு முன்பு விக்டோரியா என்பவருடன் திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். சிவக்குமார் ஊத்தங்கரை அடுத்த ஜோதி நகரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் கடந்த நான்கு ஆண்டுகளாக கணித ஆசிரியராக பணியாற்றி வந்தார்

  இந்நிலையில் தான் ஜனவரி மாதம் 29ம் தேதி திருப்பத்தூர் மாவட்டம் பங்களாமேடு பகுதியில், மலைக்கு செல்லும் காட்டுப் பாதையில் தலை நசுங்கிய நிலையில் சிவக்குமார் சடலமாக மீட்கப்பட்டார்

  சடலம் கிடந்த இடத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் சிவகுமாரின் இருசக்கர வாகனம் கிடந்ததால் இது திட்டமிட்ட கொலைதான் என்று தீர்மானித்தனர் போலீசார்.

  சிவக்குமாரின் செல்போன் எண்ணை ஆய்வு செய்ததில் உடன் பணியாற்றிய ஆசிரியரான லட்சுமி என்பவரிடம் சிவக்குமார் அதிக நேரம் பேசியிருப்பது தெரியவந்தது. லட்சுமியிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

  அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய சிவக்குமாருக்கு உடன் பணியாற்றிய அறிவியல் ஆசிரியர் லட்சுமியுடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. அடிக்கடி தனிமையில் சந்தித்துக் கொண்ட இருவரும் பல்வேறு இடங்களுக்கு சுற்றியுள்ளனர். இந்த விவகாரம் லட்சுமியின் கணவர் இளங்கோவிற்கு தெரியந்துள்ளது. இருவரையும் இளங்கோ பலமுறை கண்டித்துள்ளார். ஆனால் எதை பற்றியும் கவலைகொள்ளாத இருவரும் தங்கள் காதலை தொடர்ந்துள்ளனர்,

  ஆத்திரமடைந்த இளங்கோ சிவகுமாரை தீர்த்துக்கட்ட முடிவுசெய்து ஊத்தங்கரையை சேர்ந்த லாரி உரிமையாளரும் கூலிப்படையை சேர்ந்தவருமான வெள்ளைச்சாமி என்பவரை அனுகினார்.

  ஏற்கனவே பல கொலை, கொள்ளை வழக்குகளில் சிக்கியுள்ள வெள்ளைச்சாமி முன் பணமாக ஒரு லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு சிவக்குமாரை தீர்த்துக்கட்ட திட்டம் போட்டார். ஜனவரி 29 ஆம் தேதி பணிக்கு சென்ற சிவக்குமாரை ஸ்கார்பியோ காரில் வந்த கும்பல் சாலையின் குறுக்கே வழிமறித்து கடத்திச் சென்றது.

  சிவக்குமாரின் கை, கால்களை கட்டிக் கடத்திய கும்பல் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பங்களாமேடு பகுதியில் ரயில்வே பாதைக்கு சென்று ரயில் வரும் போது தள்ளி விட்டு கொலை செய்து விபத்து போல சித்திரிக்க திட்டமிட்டனர். ஆனால் ரயில் எதுவும் அந்த நேரத்தில் வராததால் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் சிவக்குமாரை கட்டையால் அடித்துக் கொன்ற கும்பல் அடையாளம் தெரியாமல் இருக்க தலையில் லாரியை ஏற்றி தலையை நசுக்கி சென்றது விசாரணையில் தெரியவந்தது.

  லட்சுமியின் கணவர் இளங்கோ மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த வெள்ளைச்சாமி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.  அவர்கள் அளித்த தகவலின் பேரில், சந்திரபோஸ், அதே பகுதியை சேர்ந்த 27 வயதான ஜீவ இந்திர ஹரிஹரன் ,35 வயதான கணேசன் ,31 வயதான அறிவழகன் , ஊத்தங்கரை வண்டிக்காரன் வட்டம் பகுதியை சேர்ந்த 30 வயதான சத்தியமூர்த்தி , திருப்பத்தூர் மாவட்டம் சின்னராம்பட்டி பகுதியை சேர்ந்த 27 வயதான மற்றொரு இளங்கோ ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

  கொலைக்கு பயன்படுத்திய ஸ்கார்பியோ கார் மற்றும் லாரியை பறிமுதல் செய்த போலீசார், 8 பேரிடமும் விசாரணையை முடித்து, திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.  கள்ளக்காதல் தொடர்பால் அரசுப் பள்ளி ஆசிரியர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்..
  Published by:Yuvaraj V
  First published: