காதலனா? கணவனா? 17 வயது சிறுமிக்கு திருமணம்: பாய்ந்தது போக்சோ..!

Crime | தந்தை மாடசாமி, கணவர் விவேக், காதலன் சுதீஷ் மற்றும் விவேக்கின் பெற்றோர் என ஒட்டுமொத்த குடும்பத்தின் மீது போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

  • Share this:
கன்னியாகுமரி மாவட்டத்தில் திருமணமான அன்று முதலிரவில், கணவர் வெளியேற காதலன் சுவர் ஏறிக் குதித்து காதலியை அழைத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் கணவர், காதலன், தந்தை, சித்தி, மாமனார், மாமியார் என ஒட்டுமொத்த குடும்பத்தின் மீதே போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை அடுத்த புலியூர்குறிச்சியைச் சேர்ந்தவர் மாடசாமி. இவரது 17 வயது மகள் தக்கலை அருகே உள்ள கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டப் படிப்பு படித்து வந்துள்ளார். தினமும் கல்லூரிக்கு நடந்து சென்ற சிறுமிக்கு, சாலையோர நடைபாதை வியாபாரியான 22 வயது சுதீஷுடன் சிறுமிக்குப் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது

இருவரும் பல இடங்களுக்கு சுற்றித் திரிந்ததோடு தனிமையிலும் சந்தித்து தங்கள் காதலை வளர்த்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், மகளின் காதல் விஷயத்தை அறிந்த தந்தை மாடசாமி அதிர்ச்சியடைந்தார். அதையடுத்து மகளை வீட்டில் தனிமைப்படுத்தினார்


சென்னையில் பணியாற்றி வந்த 36 வயது விவேக், கொரோனா ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு வந்திருந்தார். உடனடியாக அவரை மாப்பிள்ளையாக நிச்சயித்த மாடசாமி, கடந்த 14ம் தேதி யாருக்கும் தெரியாமல் அவருக்கும் தனது மகளுக்கும் திருமணம் நடத்தியுள்ளார். இந்தத் திருமணத்தில் உடன்பாடில்லை என சிறுமி வலியுறுத்தியும் மாடசாமி காதில் வாங்கிக் கொள்ளவில்லை.

இந்த நிலையில் திருமணம் நடந்த அன்று முதலிரவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விவேக் முதலிரவு அறைக்கு சென்றபோது அங்கு சிறுமி, தனது காதலனுடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அதி்ர்ச்சி அடைந்த விவேக்கிற்கு நடந்த விஷயங்கள் அனைத்தையும் சிறுமி எடுத்துக் கூறினார்.

மேலும் தன்னை வற்புறுத்த வேண்டாம் என்றும் காதலனுடன் தான் வாழப் போவதாகவும் சிறுமி தெளிவாகக் கூறி விட்டார். மனம் நொந்த விவேக் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்; இதற்கிடையே காதலன் சுதீஷை வீட்டிற்கு வரும்படி அழைத்துள்ளார் சிறுமி. வீட்டின் வாசல் கதவு பூட்டியிருக்கவே காதலன் சுதீஷ் சுவரேறிக் குதித்து உள்ளே சென்றுள்ளார்.அவரைப் பார்த்த விவேக்கின் பெற்றோர் அதிர்ச்சியடைந்து உடனடியாக தக்கலை காவல்நிலையத்திற்கு செல்போனில் புகாரளித்தனர். தக்கலை போலீசார் உடனடியாக விவேக்கின் வீட்டிற்கு சென்று விசாரிக்க நிலைமை தலைகீழாகியது.

சுகன்யாவிடம் விசாரித்தபோது தனக்கு 17 வயதுதான் ஆகிறது என்றும் ஏற்கனவே காதலன் சுதீஷ் தனக்கு தாலி கட்டிவிட்டார் என்றும் கூறி கதறியுள்ளார். மேலும் தனது விருப்பமின்றி விவேக் உடன் கட்டாயத் திருமணம் செய்து விட்டதாகவும் அழுதுள்ளார். சுதீஷிடம் விசாரித்தபோது காதலிக்கு 18 வயது பூர்த்தியான பின்பு பெண் கேட்க திட்டமிட்டிருந்ததாகவும் ஆனால் நிலவரம் கலவரமாகி விட்டதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து சிறுமியை மார்த்தாண்டம் மகளிர் காவல்நிலையத்திற்குப் போலீசார் அனுப்பி வைத்தனர். 17 வயது சிறுமிக்குக் கட்டாயத் திருமணம் செய்து வைத்ததால், தந்தை மாடசாமி, கணவர் விவேக், காதலன் சுதீஷ் மற்றும் விவேக்கின் பெற்றோர் என ஒட்டுமொத்த குடும்பத்தின் மீது போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

22 வயது காதலனை மறக்கடிக்க 36 வயது நபருக்கு 17 வயது மகளை திருமணம் செய்து வைக்கத் துணிந்த தந்தை, நடந்ததை அம்பலப்படுத்திய சிறுமி என இந்த சம்பவம் கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTubeFirst published: May 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading