CRIME CHENGALPET WOMAN POLICE HUSBAND DEATH CASE YUV
ஏற்கெனவே திருமணம் ஆனதை மறைத்த ’போலீஸ்’ மனைவி.. காதல் கணவர் தற்கொலை
தனது தற்கொலைக்கு மனைவி சங்கீதா, அவரது காதலன் புருஷோத்தமன், சங்கீதாவுடன் பணியாற்றிய காவலர்கள் 3 பேர் ஆகியோர் தான் காரணம் என்று கணவர் கடிதம் எழுதி வைத்ததாகவும் கூறப்படுகிறது.
செங்கல்பட்டில் பெண் காவலரை காதலித்து திருமணம் செய்து கொண்டவர், திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், பெண் காவலரை கைது செய்யும் வரை சடலத்தை வாங்க மாட்டோம் எனவும் கணவரின் உறவினர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் ஒழலூரைச் சேர்ந்தவர் 23 வயதான யுவராஜ்; இவர் பெயின்டிங் கான்ட்ராக்டராக இருந்தார். இவருக்கும் செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் 28 வயதான சங்கீதா என்ற பெண் காவலருக்கும் இடையே காதல் மலர்ந்தது.
2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம், இருங்குன்றப் பள்ளி முருகன் கோவிலில் இரு தரப்பு வீட்டினரும் காதலர்களுக்குத் திருமணம் செய்து வைத்தனர். இந்த நிலையில், சங்கீதாவிற்கு அடிக்கடி பல செல்போன் எண்களில் இருந்து அழைப்புகள் வந்தவண்ணம் இருந்ததால் யுவராஜ் சந்தேகமடைந்தார்.
இதுகுறித்து விசாரித்தபோது சங்கீதாவிற்கு ஏற்கனவே திருமணமாகி 8 வயதில் மகன் இருப்பதும் அதை அவர் மறைத்ததும் தெரியவந்தது. மனமுடைந்த யுவராஜ், இதுகுறித்து சங்கீதாவிடம் கேட்டபோது அவர் சரியாக பதிலளிக்கவில்லை. விரக்தியடைந்த யுவராஜ் சில மாதங்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயன்று குடும்பத்தினரால் காப்பாற்றப்பட்டார்.
இந்த நிலையில், சங்கீதாவின் குடும்பத்தினர் யுவராஜையும் அவரது குடும்பத்தினரையும் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனஉளைச்சலுக்காளான யுவராஜ், ஜனவரி 29ம் தேதி விஷமருந்திய நிலையில், செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும் தனது தற்கொலைக்கு மனைவி சங்கீதா, அவரது காதலன் புருஷோத்தமன், சங்கீதாவுடன் பணியாற்றிய காவலர்கள் 3 பேர் ஆகியோர் தான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்ததாகவும் கூறப்படுகிறது.
யுவராஜின் சடலத்தை வாங்க மறுத்த உறவினர்கள் ஞாயிற்றுக்கிழமை செங்கல்பட்டு மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தையை அடுத்து சடலத்தை பெற்றுக் கொள்வதாக உறவினர்கள் ஒப்புக் கொண்டனர். இதையடுத்து சங்கீதாவை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட எஸ்பி உத்தரவிட்டுள்ளார். வழக்குப் பதிவு செய்த போலீசார் யுவராஜ் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.