• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மறைந்தார் க்ரியா எஸ்.ராமகிருஷ்ணன்... யார் இந்த பதிப்புலக ஆளுமை..?

மறைந்தார் க்ரியா எஸ்.ராமகிருஷ்ணன்... யார் இந்த பதிப்புலக ஆளுமை..?

க்ரியா எஸ்.ராமகிருஷ்ணன்

க்ரியா எஸ்.ராமகிருஷ்ணன்

தமிழ் பதிப்பாளர் க்ரியா எஸ்.ராமகிருஷ்ணன் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 75.

  • Share this:
    பதிப்புலக ஆளுமை என்றழைக்கப்படும் க்ரியா ராமகிருஷ்ணன், தெலுங்கு பிராமண வகுப்பைச் சேர்ந்தவர். சென்னையில் பிறந்ததால் தமிழ் மொழி மீது சிறுவயதிலேயே பற்றுக்கொண்டார். லயோலா கல்லூரியில் சமூகப்பணி துறையில் முதுகலைப் பட்டம் பெற்ற பின் விளம்பரத்துறையில் கால் பதித்தார். 1970-ம் ஆண்டு ராமகிருஷ்ணன் தனது நண்பர்களுடன் சேர்ந்து "கசடதபற" என்ற தமிழ்ப் பத்திரிகையைத் தொடங்கினார். தமிழ் இலக்கியத்தை தரத்துடன் வெளியிடுவதில் "கசடதபற" இன்றும் முன்னோடியாக உள்ளது.

    தனது 30-வது வயதில் க்ரியா பதிப்பகத்தைத் தொடங்கினார் ராமகிருஷ்ணன். தமிழ்ப் புத்தகங்களை வெளிநாட்டு புத்தகங்களின் தரத்தோடு வெளியிட்டது க்ரியா பதிப்பகம். ராமகிருஷ்ணனின் மிகப் பெரிய சாதனையாகக் கருதப்படுவது தற்கால தமிழ் அகராதி. இதன் முதல் பதிப்பு 1992-ம் ஆண்டு வெளியானது. இதன் திருத்திய இரண்டாவது பதிப்பு 2008-ல் வெளியிடப்பட்டது. இதனை இலக்கியவாதிகளும் மொழி ஆர்வலர்களும் இணைந்து உருவாக்கினர்.

    கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ராமகிருஷ்ணன், தற்கால தமிழ் அகராதியின் மூன்றாவது பதிப்பை சமீபத்தில் படுக்கையிலிருந்தபடியே வெளியிட்டார். தென்கிழக்கு ஆசியாவில், ஒரு அகராதி குறிப்பிட்ட இடைவெளிகளில் புதுப்பிக்கப்பட்டு வெளியிடப்படுவது இதுவே முதல்முறை.



    புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர்களான மௌனி, அசோகமித்ரன், சா. கந்தசாமி, சுந்தர ராமசாமி உள்ளிட்டவர்களின் எழுத்துகளை வெளியிட்டவர் க்ரியா ராமகிருஷ்ணன். ஹார்வர்டு பல்கலைக் கழகத்துடன் இணைந்து க்ரியா பதிப்பகம் வெளியிட்ட ஐராவதம் மகாதேவனின் Early Tamil Epigraphy, from the Earliest Times to the Sixth Century A.D என்ற புத்தகம் மேற்கத்திய புத்தகங்களுக்கு பெரும் சவாலாக விளங்குகிறது.

    மொழி என்ற பொது அறக்கட்டளை, கூத்துப்பட்டறை மற்றும் ரோஜா முத்தையா ஆய்வு நூலகம் ஆகியவற்றை அமைப்பதிலும் க்ரியா ராமகிருஷ்ணன் முக்கியப் பங்கு வகித்தார். க்ரியா ராமகிருஷ்ணன் மறைவிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களும் எழுத்தாளர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: