Home /News /tamil-nadu /

கோவை ரயில்வே நிர்வாகத்துக்கு எம்.பி., பி.ஆர். நடராஜன் கண்டனம்...!

கோவை ரயில்வே நிர்வாகத்துக்கு எம்.பி., பி.ஆர். நடராஜன் கண்டனம்...!

பி.ஆர். நடராஜன் எம்.பி.

பி.ஆர். நடராஜன் எம்.பி.

வேலையிழந்து, வருவாய் இழந்து, பசி, பட்டினி என்கிற கொடும்துயரத்தைச் சுமந்துகொண்டு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தம் சொந்த ஊருக்குச் செல்லும்போதாவது உரிய வசதிகளுடன் செல்ல உரிய ஏற்பாடுகளை கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவை ரயில்வே நிர்வாகம் செய்துத்தர வேண்டும்

மேலும் படிக்கவும் ...
    சொந்த ஊருக்குச் செல்லும் தொழிலாளர்களுக்கு உரிய வசதிகள் ரயில்வே நிர்வாகத்தால் செய்துத் தரப்பட்டுள்ளனவா? என்பது குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகத்தினரை கோவை ரயில்வே நிர்வாகம் தடுத்துள்ளதை பி.ஆர். நடராஜன் எம்பி கண்டித்துள்ளார்.

    இது குறித்து கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
    ”புலம் பெயர்ந்த வடமாநிலத்தவர்கள் சொந்த ஊருக்குத் திரும்ப விருப்பக் கடிதம் பெறப்பட்டு தமிழக அரசால் சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டு அனுப்பபடுகிறார்கள். இதன் ஒரு பகுதியாக கோவையிலும் இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதில் கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் ரயில்வே நிர்வாகம் தங்களது கடமைகளை சரிவர நிறைவேற்றுகிறார்களா என்பதை வெளிச்சத்திற்குக் கொண்டுவருவது ஊடகத்தினரின் கடமை.

    கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் என்கிற பேரிடர் காலம் என்றாலும் தங்களது கடமையை திறம்பட ஊடகவியலாளர்கள் மேற்கொண்டு வரும் நிலையில், கோவை ரயில்நிலையத்தில் பயணிகளுக்குச் செய்யபட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களை அனுமதிக்க முடியாது என கோவை ரயில்நிலைய ஏடிஆர்எம், ரயில்வே காவலர்களைப் பயன்படுத்தி தடுத்து நிறுத்தியுள்ளார் என்கிற தகவலும், சில ஊடகவியலாளர்களை சிறைபிடிப்பதுபோல் பிடித்து வைத்தனர் என்கிற தகவலும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. தவறு செய்பவர்கள் ஊடகத்தைக் கண்டு அஞ்சுவது இயல்பானது. கோவை ரயில்வே நிர்வாகம் ஊடகத்தை கண்டு அஞ்சுவதற்கான காரணம் புதிராக இருக்கிறது.

    இது குறித்து விசாரிக்கையில் பல்வேறு தகவல்கள் வருகின்றன. ரயில் நிலையத்தில் உள்ள கழிவறைகளைப் பயன்படுத்த விடாமல் பூட்டி வைத்திருப்பதாகவும், தண்ணீர் வசதி ஏற்படுத்தித் தரவில்லை என்றும், ரயில்பெட்டிகள் சுகாதாரமாக இல்லை, பயணிகளுக்கு உரிய வசதிகள் செய்துத் தரப்படவில்லை என அடுத்தடுத்து புகார்கள் வருகின்றன. இது எந்த அளவிற்கு உண்மை எனத் தெரியவில்லை. இதன் காரணமாகத்தான் ஊடகத்தினரை அனுமதிக்கவில்லையா என்கிற சந்தேகமும் வருகிறது.

    சிறந்த ரயில்நிலையம் என்கிற ஆதார் சிறப்பு அந்தஸ்து பெற்றது கோவை ரயில்நிலையம். இத்தகைய பெருமையை சீர்குலைக்கும் விதமான கோவை ரயில்வே நிர்வாகத்தின் நடவடிக்கையை ஏற்கமுடியாது. இந்த சிறப்பு ரயில்களில் செல்பவர்கள் யாரும் இலவசமாகச் செல்லவில்லை. அதற்கான கட்டணத்தைச் செலுத்தி மாவட்ட நிர்வாகம் பயணச்சீட்டை ஒவ்வொருவரிடம் கொடுத்துத்தான் தொழிலாளர்கள் அனுப்பப்டுகின்றனர்.

    உடனடியாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எவ்வித சிரமமும் இன்றி பயணம் செய்வதை உறுதிப்படுத்தவும், ரயில்நிலையங்களில் தேவையான அடிப்படை வசதிகள் செய்துத் தருவதை ரயில்வே நிர்வாகம் உறுதிப்படுத்தவும் வேண்டும். நாங்கள் பொறுப்போடுதான் செயல்படுகிறோம் என்பதை உறுதிப்படுத்த ரயில் நிலையத்திற்குள் ஊடகவியலாளர்களை அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

    இதேபோல, பேருந்து வசதிகள் ஏதும் இல்லாததால் கோவை ரயில்நிலையத்திற்கு வந்து சேரவேண்டிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மேட்டுப்பாளையம், காரமடை, அன்னூர், கோவில்பாளையம், சூலூர், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நடந்தே வருகின்றனர். இந்தச் சாலைகளில் சாரைசாரையாக இத்தொழிலாளர்கள் நடந்தே வருவது வேதனையை ஏற்படுத்துகிறது.

    சில இடங்களில் லாரிகளில் ஆட்டுமந்தைகளை ஏற்றுவதுபோல ஏற்றி ரயில் நிலையம் கொண்டு வருகின்றனர். எப்படியாவது ஊர் போகவேண்டும் என்கிற தொழிலாளிகளின் எண்ணமும், எப்படியாவது இந்த ஊரில் இருந்து கிளம்பினால் சரி என்கிற நிர்வாகத்தின் நடவடிக்கையும் ஏற்புடையதல்ல. உடனடியாக மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்ட அளவிலான பேருந்தை இயக்க வேண்டும். ஒவ்வொரு பகுதியில் இருந்தும் இத்தொழிலாளர்களை ஏற்றி கோவை ரயில் நிலையத்தில் இறக்கிவிடுவதற்கான வசதிகள் செய்துத் தரப்பட வேண்டும்.

    வேலையிழந்து, வருவாய் இழந்து, பசி, பட்டினி என்கிற கொடும்துயரத்தைச் சுமந்துகொண்டு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தம் சொந்த ஊருக்குச் செல்லும்போதாவது உரிய வசதிகளுடன் செல்ல உரிய ஏற்பாடுகளை கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவை ரயில்வே நிர்வாகம் செய்துத்தர வேண்டும் எனக் கேட்டுகொள்கிறேன்."

    இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்தார்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also see:
    Published by:Rizwan
    First published:

    Tags: Coimbatore, Indian Railways, Lockdown

    அடுத்த செய்தி