கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பாக கடந்த அக்டோபர் 23ம் தேதி கார் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இது தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை விசாரித்து வரும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கடந்த 21 ம் தேதி பெரோஸ் கான்,உமர் பாரூக், முஹம்மது அசாருதீன், அப்சர் கான் மற்றும் பெரோஸ் ஆகிய ஐந்து பேரை மட்டும் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் 5 பேரையும் சென்னையில் இருந்து கோவை அழைத்து வந்து விசாரணை நடத்தப்பட்டது.
கோவை நகரில் பல்வேறு பகுதிகளில் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் ஐந்து பேரையும் NIA அதிகாரிகள் ஈரோடு மாவட்டம் ஹசனூர் பகுதிக்கு நேற்று மாலை அழைத்துச் சென்றனர். தமிழக கர்நாடக எல்லையில் உள்ள ஹசனூர் வனப்பகுதியில் உள்ள ராமண்ணா ஹோட்டல் பகுதி மற்றும் அங்குள்ள வனத்துறை சோதனை சாவடி ஆகிய பகுதிகளுக்கு 5 பேரையும் அழைத்து விசாரணை நடத்தியதுடன் அதை புகைப்படம் மற்றும் வீடியோவாக பதிவு செய்தனர்.
இந்நிலையில் ஐந்து பேரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் சிலருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.இதனையடுத்து இது தொடர்பாக கோவையைச் சேர்ந்த ஷேக் இதயத்துல்லா மற்றும் சனாபர் அலி ஆகிய இருவரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர். இவர்களிடமிருந்து செல்போன் உள்ளிட்ட சில பொருட்களும் பதிவுகள் செய்யப்பட்டது.
குறிப்பாக இவர்களில் உமர்பாரூக்கிடம் விசாரணை நடத்திய போது, தற்கொலைபடை தாக்குதலில் ஈடுபட்ட ஜமிஷா மூபினுடன் முஹம்மது அசாருதீன், ஷேக் இதயத்துல்லா, உமர்பாரூக் , சனாபர் அலி ஆகியோர் ஹாசனூர் வனப்பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் கூடி தீவிரவாத சதி திட்டம் தீட்டி இருப்பதும் உமர் பாரூக்கிடம் மேற்கொண்ட விசாரணையில் தெரிய வந்ததை அடுத்து சனாபர் அலி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
கோவையில் கடந்த 4 நாட்களாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில்,நாளையுடன் NIA விற்கு வழங்கப்பட்ட காவல் முடிவடைவதால் 5 பேரையும் இன்று சென்னை அழைத்து செல்கின்றனர். நாளை 5 பேரையும் மீண்டும் சென்னை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருக்கின்றனர். இதே போல் கைது செய்யப்பட்டுள்ள ஷேக் இதயத்துல்லா மற்றும் சனாபர் அலி ஆகிய இருவரையும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருக்கின்றனர். இந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் மேலும் சிலர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, NIA