• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களின் சிலைகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவு

பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களின் சிலைகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றம்

‘தலைவர் பூங்கா’ உருவாக்கி சாலைகள் மற்றும் பொது இடங்களில் இருக்கும் தலைவர் சிலைகளை பூங்காவில் வைத்து பாரமரிக்க வேண்டும்.

  • Share this:
    தமிழகம் முழுவதும் பொது இடங்கள், நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட இடங்களில் உள்ள தலைவர்களின் சிலைகளை 3 மாதங்களில் அடையாளம் கண்டு அகற்ற வேண்டும் என்றும், தமிழகத்தில் ‘தலைவர் பூங்கா’ உருவாக்கி சாலைகள் மற்றும் பொது இடங்களில் இருக்கும் தலைவர் சிலைகளை பூங்காவில் வைத்து பாரமரிக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    வேலூர் மாவட்டம் அரக்கோணம் தாலுகா கோனுர் கண்டிகை கிராமத்தில் உள்ள மேய்கால் புறம்போக்கு நிலத்தில் அம்பேத்கர் சிலை நிறுவ பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனுமதி பெறாமல் சிலை வைக்கப்பட்டுள்ளதால் சிலையை அகற்ற தாசில்தார் உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்து அந்த கிராமத்தை சேர்ந்த வழக்கறிஞர் வீரராகன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நெடுஞ்சாலைகளில் சிலைகள் வைக்க கூடாது என உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் சிலையை அகற்றியதில் எந்த தவறும் இல்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சட்ட விதிகள் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை பின்பற்ற வேண்டியது அவசியம் என தெரிவித்த நீதிபதி, தமிழகம் முழுவதும் பொது இடங்கள், நெடுஞ்சாலைகள், அரசு நிலங்கள்,பொது சாலைகள், மேய்கால் புறம்போக்கு ஆகிய இடங்களில் உள்ள சிலைகளை 3 மாதங்களில் அடையாளம் கண்டு அகற்ற வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டார்.

    மேலும், பொதுமக்கள் உரிமைகளை பாதிக்காத வகையில் சிலைகள் மற்றும் கட்டுமானங்களை அமைக்க அனுமதி வழங்குவது தொடர்பாக விரிவான விதிகளை வகுக்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் ‘தலைவர் பூங்கா’ உருவாக்கி சாலைகள் மற்றும் பொது இடங்களில் இருக்கும் தலைவர் சிலைகளை பூங்காவில் வைத்து பாரமரிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, சிலைகள் பராமரிப்பதற்கான செலவுகளை சிலை வைக்க அனுமதி பெற்றவர்களிடம் வசூலிக்க வேண்டும் எனவும், சிலைகள் பராமரிப்பு தொகை செலுத்தாதவர்களிடம் இருந்து, அத்தொகையை வசூலிக்க சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு இந்த உத்தரவுகளை அமல்படுத்தியது தொடர்பாக 6 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டார்.

    சிலைகள் தாக்கப்பட்டு சட்ட ஒழுங்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்ட நீதிபதி, தலைவர்கள் பிறந்தநாள், நினைவு நாள் நேரங்களில் நடைபெறும் நிகழ்வுகளால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக தெரிவித்தார். மேலும், தனியார் இடங்களில் சிலை வைப்பது அவர்களின் விருப்பம் என தெரிவித்த நீதிபதி, உச்சநீதிமன்ற தீர்ப்பை திறமையாக அமல்படுத்தாததால் தான் சில இடங்களில் பதற்றமான சூழல் உருவாவதாக குற்றம் சாட்டினார்.

    Must Read : குயின்ஸ்லேண்டு நிலம் நீதிமன்ற வழிகாட்டுதல் படி மீட்கப்படும் - அமைச்சர் சேகர்பாபு

    மக்கள் நலனை கருத்தில் கொண்டு பல ஆண்டுகளாக நிலவும் சாதி மோதல்களை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, பொது இடங்கள், சாலைகளில் சிலைகள் வைப்பதை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் இல்லையென்றால் மக்கள் மனதில் தற்போது நிலவும் அச்சத்தை போக்க முடியாது என தெரிவித்து வழக்கை முடித்து வைத்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: