தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும், சென்னையில் மட்டும் 950 நீர் நிலைகள் காணாமல் போய் உள்ளன, அவை ஆக்கிரமிக்கப்பட்டு கட்டிடங்களாக மாறியுள்ளன. எனவே, நீர் நிலைகள், வனப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை தமிழக அரசு அகற்ற வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் தாக்கல் செய்துள்ள மனுவில், காஞ்சீபுரம் மாவட்டம் செம்மஞ்சேரியில் காவல் நிலையம் தாமரைக்கேணி என்ற நீர்நிலையில் கட்டப்பட்டுள்ளது என்றும் இந்த காவல் நிலையத்தை அகற்ற வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர், செம்மஞ்சேரி காவல் நிலையம் நீர்நிலையில் கட்டப்பட்டுள்ளதா? என்று ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய ஐ.ஐ.டி., பேராசிரியர்கள் அடங்கிய குழுவை அமைத்து உத்தரவிட்டனர். இந்த குழு தாக்கல் செய்த ஆய்வு அறிக்கையில், காவல் நிலையம் ஏரியில் தான் கட்டப்பட்டுள்ளது. அதேநேரம், இதை இடிப்பதால் பெரிய மாற்றம் ஏற்படாது. அங்கு ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன என்று கூறப்பட்டு இருந்தது.
இதையடுத்து, தாமரைக்கேணி நீர் நிலையில் எந்தெந்த ஆக்கிரமிப்புகளை அகற்றலாம் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மீண்டும் அந்த குழுவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் முககிய உத்தரவுகளை பிறப்பித்தனர்.
அதில், தமிழகத்தில் ஏராளமான நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனால், நிலத்தடி நீர் வெகுவாக குறைந்துவிட்டது. ஆனால், அதிகாரிகள் இதை கண்டுகொள்வதில்லை. நீர் நிலைகளில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்க சட்டப்படியான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளவில்லை. நீர் நிலைகள் மட்டுமல்லாமல் வனப்பகுதிகளும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. குடியிருப்புகள் உள்ளிட்ட வளர்ச்சி பணிகள் தேவைதான். ஆனால், அதற்காக நீர் நிலைகளையும், வனப்பகுதிகளையும் வளர்ச்சி பணிகள் என்ற பெயரில் அழித்துவிடக்கூடாது.
எனவே, நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை தமிழக தலைமை செயலாளர் உறுதி செய்ய வேண்டும். நீர் நிலைகள் பழைய நிலைக்கு கொண்டுவரப்பட்டால்தான் வருங்கால சந்ததிகளுக்கு அவை பயனுள்ளதாக இருக்கும். சென்னையில் மட்டும் 950 நீர் நிலைகள் காணாமல் போய் உள்ளது. அவை ஆக்கிரமிக்கப்பட்டு கட்டிடங்களாக மாறியுள்ளன.
Must Read : அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த முக்கிய நடவடிக்கை - மு.க.ஸ்டாலின்
எனவே, நீர் நிலைகள், வனப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இது குறித்து தமிழக அரசு நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.