ஓ.பி.எஸ்., எடப்பாடி, சசிகலா ஆகியோருக்கு நோட்டீஸ் - சென்னை உரிமையியல் நீதிமன்றம்

ஓபிஎஸ்- இபிஎஸ்

கட்சியின் விதிகளுக்கு முரணாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள புதிய விதிகளின்படி செயல்பட கட்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், பழைய விதிகளின்படி கட்சி செயல்பட உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
அதிமுகவில் புதிய பதவி நியமனங்கள் மேற்கொள்ள தடை விதிக்க கோரி அக்கட்சியின் உறுப்பினர் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா ஆகியோருக்கு சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல்லைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர் சூரியமூர்த்தி என்பவர் தாக்கல் செய்த மனுவில் அதிமுக கட்சி விதியின்படி, பொதுச் செயலாளர் கட்சி உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும் எனவும், இந்த விதியை திருத்த முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு தற்காலிக பொதுச்செயலாளராக சசிகலாவை நியமித்து பொதுக்குழு, செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், சொத்து வழக்கில் சசிகலா சிறையில் அடைக்கப்பட்ட பிறகு, தற்போதைய ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இணைந்து பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, பொதுச் செயலாளர் பதவியை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

பொதுச் செயலாளர் பதவியை நீக்குவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை என்றும், பொதுச் செயலாளர் பதவியை நீக்கியது கட்சியின் விதிகளுக்கு முரணானது எனவும், மக்கள் பிரதிநித்துவ சட்டத்திற்கு முரணானது எனவும் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.

Also read... நெருக்கடியில் தமிழகம்; தேவையான ஆக்சிஜனை உடனடியாக வழங்குக - பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

கட்சியில் தற்போது நடைமுறையில் இருக்கக்கூடிய இரட்டை தலைமையை உறுப்பினர்கள் விரும்பவில்லை என்றும் 2014 அக்டோபரில் நடத்தப்பட்ட உள்கட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைந்து விட்டதால், உட்கட்சி தேர்தலை நடத்த அதிமுகவுக்கு உத்தரவிட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு 2020 ஆகஸ்டில் மனு அளித்ததாகவும் கூறியுள்ளார்.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்திற்கு பதில் அளித்த ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், விரைவில் தேர்தல் நடத்துவதாக உறுதியளித்து ஓராண்டுக்கு மேலாகியும் இன்னும் தேர்தல் நடத்தப்படவில்லை என்றும் மனுவில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

கட்சியின் விதிகளுக்கு முரணாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள புதிய விதிகளின்படி செயல்பட கட்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், பழைய விதிகளின்படி கட்சி செயல்பட உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் கட்சியில் புதிய நியமனங்கள் மேற்கொள்வதற்கு அவைத்தலைவர், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார் .

இந்த மனுவை விசாரித்த சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம், மனுவுக்கு ஜூலை 7ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா ஆகியோருக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: