வங்கிப் பணிக்காக கும்பகோணத்திற்கு வந்த வடமாநிலப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அதிரடித் தீர்ப்பு..!

சாகும் வரை சிறை தண்டனையும், ஆட்டோ ஓட்டுநருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

வங்கிப் பணிக்காக கும்பகோணத்திற்கு வந்த வடமாநிலப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அதிரடித் தீர்ப்பு..!
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: January 14, 2020, 10:23 AM IST
  • Share this:
வங்கிப் பணிக்காக கும்பகோணத்திற்கு வந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நான்கு இளைஞர்களுக்கு சாகும் வரை சிறை தண்டனையும், ஆட்டோ ஓட்டுநருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

டெல்லியிலிருந்து கும்பகோணத்திற்கு வங்கிப்பணிக்காக நள்ளிரவில் ரயிலில் வந்து இறங்கிய இளம் பெண்ணை, கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு சாகும் வரை சிறை தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

டெல்லியைச் சேர்ந்த 27 வயது இளம்பெண் ஒருவருக்கு கும்பகோணத்தில் உள்ள வங்கி ஒன்றில் வேலை கிடைத்தது. இதற்காக டெல்லியில் இருந்து ரயில் மூலம் சென்னை வந்தார். சென்னையிலிருந்து 2018 ஆம் ஆண்டு டிசம்பர் ஒன்றாம் தேதி இரவு திருச்செந்தூர் விரைவு ரயிலில் கும்பகோணம் வந்தார்.


முதன்முறையாக கும்பகோணம் வந்ததால் அந்த பெண்ணுக்கு சரியான திசைகள் தெரியவில்லை. நள்ளிரவு 11 மணிக்கு வந்த அந்த பெண் தான் ஏற்கெனவே தங்குவதற்கு பதிவு செய்த அறைக்கு செல்வதற்கு ஆட்டோ இல்லாமல் ரயில்நிலையத்தை விட்டு காமராஜர் சாலைக்கு வந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை மறித்து ஏறினார். அந்த பெண் ஆங்கிலத்தில் தான் செல்ல வேண்டிய ஓட்டலுக்கு செல்லுமாறு கூறினார். ஆனால் ஆட்டோ ஓட்டுநர் அந்த பெண்ணை பைபாஸ் சாலை பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

ஆட்டோ ஓட்டுநரிடம் திசைமாறி செல்கிறீர்களா என கேட்டுவிட்டு, தன்னுடைய நண்பருக்கு போன் செய்துள்ளார். இதனால் பயந்துபோன ஆட்டோ ஓட்டுநர் அந்த பெண்ணை பைபாஸ் சாலையிலேயே இறக்கிவிட்டுச் சென்றுள்ளார்.அதன்பிறகு அந்த பெண் தன்னுடைய டிராலி பேக்கை இழுத்துக்கொண்டு செட்டிமண்டபத்திலிருந்து சாலையிலே நடந்து வந்துள்ளார். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவரிடம் அந்த பெண் லிப்ட் கேட்டுள்ளார். அந்த இளைஞரும் அந்த பெண்ணை தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டார்.

அவர் பின்னால் மற்றொரு நண்பரும் இன்னொரு இருசக்கர வாகனத்தில் சேர்ந்து வந்துள்ளார். இருவரும் மோட்டார் சைக்கிளில் அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு நாச்சியார்கோயில் பைபாஸ் ரோட்டுக்கு சென்று வலுகட்டாயமாக ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

மேலும் தங்களுடைய நண்பர்கள் இருவரை வரவழைத்து அவர்களும் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அந்த பெண் கூச்சலிட்டதும் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர். இதனால் அந்த பெண் பயந்து போய் உள்ளார்.

அதன்பிறகு அந்த பெண்ணை நான்கு இளைஞர்களில் ஒருவர் அழைத்துக் கொண்டு நாச்சியார்கோயில் மெயின்ரோட்டுக்கு வந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி அந்த பெண்ணை ஏற்றி அறைக்கு அனுப்பி வைத்தார்.

மறுநாள் வங்கியில் பணிபுரியும் சக பெண் ஊழியர்களிடம் தனக்கு நடந்த கொடுமையை கூறி உள்ளார். அவர்கள் மூலம் வங்கி நிர்வாகத்தின் கவனத்திற்கு இந்த விவகாரம் கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து டெல்லியில் உள்ள பெற்றோருக்கும் தகவல் தெரிந்து அவர்களும் கும்பகோணம் வந்தனர்.

வங்கி நிர்வாகம் போலீஸாரிடம் இந்த சம்பவத்தை ரகசியமாக விசாரிக்குமாறு கேட்டுகொண்டதன் பேரில், விசாரித்தபோது, டெல்லி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் யார் என தெரிய வந்தது.

அதன்படி கும்பகோணத்தைச் சேர்ந்த 26 வயதான தினேஷ், 23 வயதான வசந்த்குமார், 21 வயதான புருஷோத்தமன், 21 வயதான அன்பரசன் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் 4 பேரையும், நடுவழியில் இறக்கிவிட்ட 26 வயதான ஆட்டோ ஓட்டுநர் குருமூர்த்தியையும் கும்பகோணம் மேற்கு போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு ஓராண்டாக தஞ்சாவூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. போலீசார் தரப்பில் 700 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அரசு தரப்பு சாட்சியாக 33 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த வழக்கில் விசாரணை முடிந்த நிலையில், திங்கட்கிழமை நீதிபதி தீர்ப்பளித்தார். 5 பேரும் குற்றவாளிகள் என்று கூறிய நீதிபதி அவர்களின் தண்டனை விவரத்தை அறிவித்தார்.

குற்றவாளிகளான தினேஷ், வசந்தகுமார், புருஷோத்தமன், அன்பரசு ஆகிய நால்வருக்கும் சாகும் வரை சிறை தண்டனையும், தலா 65 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

இந்த குற்ற சம்பவத்தில் தொடர்புடைய ஆட்டோ ஓட்டுநர் குருமூர்த்திக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

வடமாநிலத்திலிருந்து வந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிகளுக்கு சாகும்வரை தண்டனை வழங்கப்பட்டதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
First published: January 14, 2020, 10:23 AM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading