தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணர் குழு உறுப்பினராக முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நியமனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைகால தடை விதித்துள்ளது.
தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் காலியாக இருக்கும் நிபுணத்துவ உறுப்பினர் பணியிடங்களுக்கு தமிழகத்தின் தலைமைச் செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற கிரிஜா வைத்தியநாதன், வருவாய் நிர்வாக ஆணையர் ஆக பணியாற்றி ஓய்வுபெற்ற சத்யகோபால் மற்றும் குஜராத்தைச் சேர்ந்த இந்திய வனத்துறை அதிகாரி அருண்குமார் வர்மா ஆகிய மூவரை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டது.
இதில் கிரிஜா வைத்தியநாதனுக்கு உரிய அனுபவம் இல்லாத காரணத்தினால் அவரது பணி நியமன உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், தேசிய பசுமை தீர்ப்பாய சட்டத்தின் பிரிவு 5ன் படி நிபுணத்துவ உறுப்பினராக நியமனம் செய்யப்பட கூடிய நபருக்கு, 15 ஆண்டுகள் இந்திய ஆட்சிப்பணி அனுபவமும், அதில் 5 ஆண்டுகள் சுற்றுச்சூழல் சார்ந்த துறையில் பணியாற்றிய அனுபவமும் இருக்க வேண்டும்.
ஆனால், கிரிஜா வைத்தியநாதனுக்கு 15 ஆண்டுகளுக்கு மேல் இந்திய ஆட்சிப்பணி அனுபவம் இருந்தாலும், சுற்றுச்சூழல் சார்ந்த பணிகளின் அனுபவம் 3 ஆண்டுகள் 6 மாதம் மட்டுமே உள்ளது என்பதால் இவரது நியமனம் தேசிய பசுமைத் தீர்ப்பாய விதிகளுக்கு எதிரானது என்றும், அதனால் அவரது நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, கிரிஜா வைத்தியநாதன் சுற்றுச்சூழல் சார்ந்த பணிகளின் 3 ஆண்டுகள் 6 மாதம் மட்டுமே அனுபவம் பெற்றிருந்தாலும், தலைமை செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் போன்ற பதவிகளில் பெற்ற அனுபவதின் அடிப்படையில் அவருக்கு இந்த நியமனம் வழங்கியதாக மத்திய அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
ஆனால், மத்திய அரசின் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணர் குழு உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் நியமனத்துக்கு இடைக்கால தடை விதித்தனர்.
கிரிஜா வைத்தியநாதன் தகுதி குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், இந்த பதவிக்கு சட்டப்படி தேவைப்படும் தகுதியை அவர் பெற்றிருக்க வில்லை எனவும் கருத்து தெரிவித்தனர்.
மேலும், இந்த மனு குறித்து கிரிஜா வைத்தியநாதன் மற்றும் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 16ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Court, National Green Tribunal